வையம்பாளையம் தடுப்பணை மரக்கன்றுகளால் பசுமைமயம்
கோவில்பாளையம்; வையம்பாளையம் தடுப்பணையில் 110 மரக்கன்றுகள் நடப்பட்டன. கொண்டையம்பாளையம் ஊராட்சி, வையம்பாளையம் தடுப்பணையில், ஒவ்வொரு வாரமும், களப்பணி நடந்து வருகிறது. மழை நீர் வரும் பாதையை சீரமைத்தல், கரையை ஒழுங்குபடுத்துதல், ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் நடக்கின்றன. 91வது வாரமாக நேற்றுமுன்தினம் களப்பணி நடந்தது.இதில் தற்போது உருவாகி வரும் உழவர் பெருந்தகை அடர்வனத்தில் வேம்பு, புங்கன், பூவரசு, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளை சேர்ந்த 110 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் அமைந்துள்ள பகுதியில் துாய்மை பணி நடந்தது. தண்ணீர் விடப்பட்டது. குப்பைகள் அகற்றப்பட்டன. இப்பணியை வையம்பாளையம் தடுப்பணை பாதுகாப்புக்குழு, ஹீரோ டெக் இந்தியா நிறுவனம், கவுசிகா நீர்க் கரங்கள் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதில் சமூக ஆர்வலர்கள் கோவிந்தராஜ், நாராயணன், ராஜாராம் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.