| ADDED : டிச 04, 2025 06:55 AM
பொள்ளாச்சி: வந்தே மாதரம் பாடலின், 150வது ஆண்டு விழாவையொட்டி, பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு சமூக ஆர்வலர் பாத யாத்திரை புறப்பட்டார். மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கருப்பையா, வந்தே மாதரம் பாடலின்,150வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு பாத யாத்திரை துவக்கினார். காந்தி ஆசிரமத்தில் பிரசார பாத யாத்திரை துவக்க விழா நடந்தது. தவத்திரு சுவாமி ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்து ஆசியுரை வழங்கினார். மகாத்மா காந்தி ஆசிரம நிர்வாக அறங்காவலர் ரங்கநாதன், பாதயாத்திரையை துவக்கி வைத்தார். மூலிகை சித்தர் பீடம் நிறுவனர் சத்தியேந்திரர், பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை செயலாளர் ஞானசேகர் மற்றும் பலர் பங்கேற்றனர். மகாத்மா காந்தி ஆசிரமத்தில் இருந்து கிளம்பிய அவருக்கு, பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை மற்றும் அபெக்ஸ் சங்கம் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. சுப்பையா கூறியதாவது: வந்தே மாதரம் பாடலின், 150வது ஆண்டு விழாவையொட்டி பிரசார பாத யாத்திரை துவக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஆசிரமத்தில் துவங்கி தொடர்ந்து, 25 நாட்களில், 550 கி.மீ. துாரம் பயணித்து, வரும், 27ம் தேதி சென்னை கிண்டி காந்தி மண்டப அருங்காட்சியகத்தில் நிறைவு செய்கிறேன். ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திரபிரசாத் பிறந்த நாளில் பிரசாரம் துவக்கி, இந்திய தேசிய கீதமான ஜன,கன,மன பாடல் முதன் முதலில் பாடப்பட்ட நாளான, 27ம் தேதி நிறைவு செய்கிறேன். தினமும், 30 கி.மீ. வீதம் நடந்து சென்று, வந்தே மாதரம் பாடல் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி செல்கிறேன். இவ்வாறு, கூறினார்.