இடியும் நிலையில் வி.ஏ.ஓ., அலுவலகம்; சான்றிதழ்கள் பெறுவதில் சிக்கல்
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி கிழக்கு கிராம நிர்வாக அலுவலகம் இடியும் நிலையில் உள்ளதால், அரசு நலத்திட்ட சான்றிதழ்களை பொதுமக்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிளிச்சி ஊராட்சி, சின்ன மத்தம்பாளையத்தில் பிளிச்சி கிழக்கு கிராம நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது. கிழக்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு சான்றுகளை பெற, இந்த அலுவலகத்தை அணுக வேண்டிய கட்டாயம் உள்ளது. சுமார், 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த வி.ஏ.ஓ., அலுவலகத்தின் மேல்கூரை ஆங்காங்கே பிளந்து கிடக்கிறது. சுவர்களில் செடி படர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது.இது குறித்து, பிளிச்சி கிழக்கு பொதுமக்கள் கூறுகையில்,' கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பல்வேறு பணிகள் மற்றும் கடமைகள் உள்ளன. கிராம கணக்குகளை பராமரித்தல், பயிர் ஆய்வு பணி, நிலவரி கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேர வேண்டிய தொகைகளை வசூல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கிராம நிர்வாக அலுவலர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.இது தொடர்பாக பொதுமக்கள் பலர் வி.ஏ.ஓ., அலுவலகத்தை தினமும் அணுகுகின்றனர். இந்நிலையில், பழுதடைந்துள்ள இந்த வி.ஏ.ஓ., அலுவலகத்தை உடனடியாக பழுது பார்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பழுதடைந்துள்ள இந்த வி.ஏ.ஓ., அலுவலகத்தை இடித்து கொடுத்தால், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய வி.ஏ.ஓ., அலுவலகத்தை கட்டி கொடுக்க தயாராக இருப்பதாக மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இடித்துக் கொடுக்க அரசு அதிகாரிகளுக்கு ஏனோ மனம் வரவில்லை' என்றனர்.