வரதராஜ பெருமாள் கோவில் நாளை கும்பாபிஷேகம்
அன்னுார்; குமரன்குன்று அருகே உள்ள சின்ன வடவள்ளியில், பழமையான பூமாதேவி, நீளாதேவி, சமேத, வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல கோடி ரூபாய் செலவில், சிற்ப சாஸ்திர முறைப்படி கர்ப்ப கிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் சுற்றுப்பிரகார மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இத்துடன் தும்பிக்கை ஆழ்வார், விஷ்ணு பகவான், லட்சுமி நரசிம்மர், உள்ளிட்ட சன்னதிகளும், பரமபத வாசல், கருவறை, விமானம், கோபுரம் ஆகியவையும் கட்டப்பட்டு திருப்பணி முடிந்துள்ளது. கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. நேற்றுமுன்தினம் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. நேற்று முதற்கால வேள்வி பூஜை நடைபெற்றது. இன்று (26ம் தேதி) இரண்டாம் கால வேள்வி பூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடைபெறுகிறது. மாலையில் நகைச்சுவை பக்தி பட்டிமன்றம் நடக்கிறது. இரவு பரதநாட்டியம் நடக்கிறது. நாளை (27ம் தேதி) காலை 9:30 மணிக்கு கோபுரம், விமானம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. தயானந்தபுரி மகா சாமிகள் அருளுரை வழங்குகிறார். காலை 9:00 மணிக்கு பக்தி பஜனையும், 11:00 மணிக்கு, இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மதியம் 12:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.