வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேக விழா கோலாகலம்
கோவை; ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் அஷ்டபந்தன மஹா, கும்பாபிஷேக விழா, நேற்று பக்தர்கள் சூழ, கோலாகலமாக நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு, நன்மங்கல வாத்திய இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. விக்னேஸ்வரபூஜை, சங்கல்பம், புண்யாகவாசனம், பஞ்சகவ்யபூஜை, கன்யாபூஜை, சுவாசினி பூஜை. மூல, மாலா மந்த்ர ஹோமங்கள், மஹா பூர்ணாஹூதி, உத்ராங்க பூஜைகள், முகூர்த்த யாத்ரா தானத்தோடு காலை 9:05 மணிக்கு, திருக்குடங்கள் ஞானத்திருஉலா வந்தன.ராஜகோபுரத்திலும் மூலவர் பரிவார விமானங்களுக்கும், திருக்குடங்கள் எழுந்தருளிவிக்கப்பட்டன. அங்கு சுவாமிகள் சமகாலத்தில் புனித தீர்த்தங்களை, கோபுர கலசங்களின் மீது ஊற்றி மஹா கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர்.அதன் பின் மஹாதீபாராதனையும் நடந்தது. காலை 10:30 மணிக்கு பக்தர்களுக்கு சர்வதரிசனமும், ஜலபிரசாதமும், அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டன.மாலை 6:00 மணிக்கு, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.