விபத்தில் சேதமடைந்த வாகனம்; ரூ.5.60 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
கோவை; விபத்தில் சேதமடைந்த சரக்கு வாகனத்துக்கு, 5.60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, கிணத்துக்கடவு அருகேயுள்ள சிங்காரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்; கோவையிலுள்ள ஸ்ரீ ராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், அவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்துக்கு, 2021, மார்ச், 25 ல், இன்சூரன்ஸ் செய்திருந்தார். இந்நிலையில், கடந்த 2024, ஆகஸ்ட் 24ல், கோவை- சென்னைக்கு சென்ற போது சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சரக்கு வாகனம் சேதமடைந்தது. வாகனம் சேதமடைந்ததற்கு இழப்பீடு தொகை வழங்க கோரி அனைத்து ஆவணங்களை இணைத்து செல்வகுமார் விண்ணப்பித்தார். வாகன சேதத்திற்கான காப்பீடு தொகை வழங்காமல் காலதாமதம் செய்து வந்தனர்.இதனால், இழப்பீடு வழங்கக்கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'வாகன சேதத்தை சரி செய்த அங்கீகரிக்கப்பட்ட பட்டறை முகவரி மற்றும் அதன் வங்கி கணக்கு விவரத்தை புகார்தாரர் கொடுக்கும் பட்சத்தில், காப்பீடு தொகை, 5.60 லட்சம் ரூபாயை, குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு எதிர்மனுதாரர் அனுப்பி வைக்க வேண்டும், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.