அங்கீகரிக்கப்படாத விளக்குகள் பொருத்தினால் வாகனம் பறிமுதல்
கோவை; கோவை மாநகர் பகுதிகளில், வாகனங்களில், அரசால் அங்கீகரிக்கப்படாத விளக்குகளை பொருத்தி இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என, மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாநகரில் பெருகிவரும், வாகன விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், வாகனங்களின் முன்புறம், பின்புறம் மற்றும் பக்கவாட்டில், வாகன ஓட்டிகளுக்கும், சாலையை கடக்கும் பாதசாரிகளுக்கும், கண்கள் கூசும் வகையில் அங்கீகரிக்கப்படாத ஒளிரும் விளக்குகளை பொருத்தி, அதனால் விபத்துகள் ஏற்படுத்தும் விதமாக இயக்கப்படும் வாகனங்கள் மீது, கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை, 65 நபர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் மட்டும், விதிமுறைகளை மீறி, ஒளி விளக்குகளை பொருத்தி இயக்கிய, 96 வாகன ஓட்டிகள் மீது, மோட்டார் வாகன சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்படாத, ஒளிரும் விளக்குகளைப் பொருத்தி, வாகனம் ஓட்டும் குற்றத்தை இரண்டாவது முறை செய்பவர்களின் மீது அபராதம் விதிப்பதுடன், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.