பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி கோபனாரி, முள்ளியில் வாகன தணிக்கை
மேட்டுப்பாளையம், ; ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக, கோவை மாவட்டம் காரமடையில் உள்ள கோபனாரி, முள்ளியில், தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.கேரள வனப்பகுதிகளில் மாவோஸ்ட்டுகள், நடமாட்டம் உள்ளது. மாநில எல்லையோரங்களில் உள்ள வனப்பகுதிகள் வழியாக தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள கேரள மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் தீவிரவாத இயக்கங்கள், நக்சல், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே கேரள மாநில எல்லை பகுதியான முள்ளி மற்றும் கோபனாரி சோதனைச்சாவடிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் நேற்று முன் தினம் இரவு முதலே விடிய விடிய தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அடர் வனப்பகுதிகளில் வனத்துறையினர் தீவிரமாக ரோந்து மேற்கொள்கின்றனர்.இதுகுறித்து, போலீசார் கூறுகையில், அத்திக்கடவு, பில்லூர், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதூர், காலன்புதூர், செங்குட்டை, குட்டை புதூர், பட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்களில், போலீசார் மற்றும் வனத்துறையினர் அந்நியர்கள் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா என தீவிர ரோந்து மேற்கொண்டு, அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்து வருகின்றனர்.முள்ளி, கோபனாரியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அச்சுறுத்தல் எதுவும் இப்பகுதிகளில் இல்லை, என்றனர்.