நுாலகம் முன்பாக வாகனங்கள்; விபத்து ஏற்படும் அபாயம்!
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, தளி ரோடு நுாலகம் முன், வாகனங்களை, ரோட்டோரத்தில் நிறுத்திச்செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை. சேதமடைந்த நடைபாதை
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் ரோட்டோரம் முழுவதும் நடைபாதை கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்களை அப்பகுதியில் நிறுத்தாமல் ரோட்டோரம் ஆக்கிரமித்து ஓட்டுநர்கள் நிறுத்துகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதுடன், நடைபாதையிலும் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.- ஜனனி, உடுமலை. மழை நீர் தேக்கம்
உடுமலை ராமசாமி நகர் ஆட்டோ ஸ்டேண்ட், ஆறுமுகம் நகர் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகியுள்ளது. மழைநீரை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செல்வம், உடுமலை. வேகத்தடை வேண்டும்
உடுமலை கல்பனா ரோட்டில் வேகத்தடை இல்லாததால், வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. நால்ரோட்டிலிருந்து வரும் வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. வாகனங்கள் அதிவேகத்துடன் வருவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. விபத்துகளை தடுக்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.- அருள்குமார், உடுமலை. தெருநாய்கள் தொல்லை
கணக்கம்பாளையம் சிந்துநகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரிக்கிறது. காலை, மாலையில் தெருவில் விளையாடும் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் துரத்துகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் ரோட்டில் நடந்துசெல்வதற்கு அச்சப்படுகின்றனர்.- மணிமேகலை, உடுமலை. சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, பசுபதி வீதி நால்ரோட்டில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. தெருநாய்கள் கழிவுகளை இழுத்துவந்து ரோட்டில் பரப்புகின்றன. மிகுதியான துர்நாற்றமும் வீசுவதால் பொதுமக்கள் அப்பகுதியை கடந்துசெல்ல முடியாமல் முகம் சுழிக்கின்றனர்.- சீனிவாசன், உடுமலை. வாகனங்கள் அத்துமீறல்
வால்பாறை, வாழைத்தோட்டம் செல்லும் ரோட்டில் சரக்கு வாகனங்கள் நடுரோட்டில் நிறுத்தி பொருட்களை ஏற்றி செல்வதால், பிற வாகன ஓட்டுநர்கள் நெரிசலில் சிக்கித்தவிக்கின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கார்த்திக், வால்பாறை. மின்விளக்கு அமைக்கணும்!
பொள்ளாச்சி, கோவை ரோட்டில் ஆச்சிபட்டி அருகே இரவு நேரத்தில் போதிய அளவு மின்விளக்கு வசதி இல்லாததால், இருளாக காணப்படுகிறது. இதனால், மக்கள் பலர் இவ்வழியில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் கூடுதலாக மின்விளக்கு அமைக்க வேண்டும்.- டேனியல், பொள்ளாச்சி. ஆக்கிரமிப்பால் நெரிசல்
பொள்ளாச்சி, கடைவீதி பூ மார்க்கெட் பகுதியில் அதிகளவு ஆக்கிரமிப்பு இருப்பதால் அவ்வழியில் வாகனங்கள் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.-- மணிகண்டன், பொள்ளாச்சி. தரமில்லாத ரோடு பணி
கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் செல்லும் ரோட்டில், வளைவு பகுதியில் சேதமடைந்த ரோடு சீரமைப்பு செய்யப்பட்டது. தற்போது இந்த ரோட்டில் கற்கள் பெயர்ந்து பரவி கிடப்பதால், வாகன ஓட்டுனர்கள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர். ரோட்டை தரமாக சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பீட்டர், கிணத்துக்கடவு. ரோட்டின் நடுவே பள்ளம்
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் விஜயராகவன் வீதியில் ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் தடுமாறி செல்கின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.- மாணிக்கம், பொள்ளாச்சி.