மேலும் செய்திகள்
சிட்டி கிரைம்
21-Mar-2025
தொண்டாமுத்தூர்: மாதம்பட்டி, சிறுவாணி மெயின் ரோட்டில், அதிவேகமாக வந்த அரசு பஸ் மோதியதில், அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஒடிசாவை சேர்ந்த பிரத்யூஸ் குமார் பத்ரா, 26 என்பவர் தனது நண்பர்களுடன் கோவைக்கு சுற்றுலா வந்துள்ளார். நேற்று காலை, பிரத்யூஸ், மாதம்பட்டி பகுதியில் ஒரு வாடகை காரில், சிறுவாணி ரோட்டில் கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது, கார் திடீரென நடுரோட்டில் நின்றது. பின்னால், வேகமாக வந்த பூண்டி வழித்தட அரசு சர்வீஸ் பஸ், பிரத்யூஸ் கார் மீது மோதி, நிற்காமல் எதிர் திசையில், தெலுங்குபாளையத்தை சேர்ந்த இசக்கியப்பன், 25 என்பவர் ஓட்டி வந்த மினி தண்ணீர் டெம்போ மீது மோதியது.இதில், முன்பாகம் முழுவதும் நொறுங்கிய மினி தண்ணீர் டெம்போ, அதன் பின்னால், வந்த கார் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.இதில், மினி தண்ணீர் டெம்போவில் வந்த இசக்கியப்பனுக்கு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள், இசக்கியப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு பஸ் டிரைவர் கார்த்திக்கு,38 காயம் ஏதும் ஏற்படவில்லை. சிறுவாணி ரோட்டில், அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தால், சுமார், 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த பேரூர் போலீசார், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்செய்தனர். காயம்பட்ட இசக்கியப்பன், காரை ஓட்டி வந்த பிரத்யூஸ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Mar-2025