ரோட்டை மறைக்கும் செடிகளால் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்
வால்பாறை,; வால்பாறை மலைப்பாதையில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்துள்ள செடிகளால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.வால்பாறை - பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில், வளைந்து, நெளிந்து செல்லும், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.ரோட்டில், விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், விரிவுபடுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.மேலும் கொண்டைஊசி வளைவுகளில் வாகனங்கள் திரும்பும் போது, விபத்து ஏற்படாமல் தடுக்க, குவிக்கண்ணாடிகள் வைக்கபட்டுள்ளன. இதனால், சமீபகாலமாக வால்பாறை மலைப்பாதையில் வாகன விபத்துக்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன.இந்நிலையில், ஆழியாறிலிருந்து வால்பாறை வரும் வழியிலும் அட்டகட்டி, கவர்க்கல், அய்யர்பாடி, வாட்டர்பால்ஸ், பழையவால்பாறை, சோலையாறுடேம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டின், இருபுறமும் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.பொதுமக்கள் கூறுகையில், 'வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வால்பாறை மலைப்பாதையில், ரோட்டில் உள்ள புதர்செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.