உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை மாற்று நிலையத்தில் தேங்கிய வாகனங்கள்

குப்பை மாற்று நிலையத்தில் தேங்கிய வாகனங்கள்

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் தீபாவளி பண்டிகை முடிந்ததும், மறுநாள் 40 சதவீத துாய்மை பணியாளர்கள் பணிக்கு வராததால், நகர் முழுவதும் ஆங்காங்கே குப்பை தேங்கியது. ஒப்பந்த டிரைவர்களும் வராமல் போராட்டத்தில் ஈடுபட்டதால், வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது; குப்பையை கிடங்கிற்கு எடுத்துச் செல்வதில், சிரமம் ஏற்பட்டது. மாற்று டிரைவர்கள் மூலம் வாகனங்கள் இயக்கப்பட்டன. நேற்று வழக்கம்போல், துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். காலை 6 மணி முதல் துாய்மை பணி வேகமாக மேற்கொள்ளப்பட்டது. இரவு 7 மணி வரை, 1,275 டன் குப்பை சேகரமானது. உக்கடம், பீளமேடு, சத்தி ரோட்டில் குப்பை மாற்று நிலையங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தலா 200 டன் குப்பை கையாளும் திறன் கொண்டவை. ஆனால், 400 டன் வரை கையாண்டதால் குப்பை ஏற்றி வந்த வாகனங்கள், வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பீளமேடு குப்பை மாற்று நிலையத்தில் ஒரே நேரத்தில், 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. ஒவ்வொரு வாகனமும் குப்பையை இறக்கி விட்டுச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாகியது. இதனால், இரண்டாவது டிரிப் குப்பை எடுத்துச் செல்லும் பணி நடக்கவில்லை. இன்று முதல் தேக்கமின்றி குப்பையை அகற்றவும், வீடு வீடாகச் சென்று தரம் பிரித்து வாங்கவும் சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''வழக்கம்போல் துாய்மை பணியாளர்கள் பணிக்கு வந்து விட்டனர். கூடுதலாக கவுண்டம்பாளையம், துடியலுார், மைல்கல் ஆகிய இடங்களில் குப்பை மாற்று நிலையங்கள் கட்டப்படுகின்றன. கவுண்டம்பாளையத்தில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். புதிதாக கட்டும் மூன்று நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டால், சமாளித்து விடலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ