பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாநகராட்சிப்பள்ளி மாணவர்களுக்குவெற்றி நிச்சயம்! துணை தேர்வு எழுத இதோ வாய்ப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவை மாநகராட்சி பள்ளிகளில் படித்த, பிளஸ் 2 மாணவ - மாணவியரில், 83 பேர் தேர்ச்சி பெறவில்லை. அவர்கள் அனைவரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள துணை தேர்வு எழுதுவதற்கு சிறப்பு பயிற்சி அளிக்க, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாநகராட்சி சார்பில், 17 மேல்நிலைப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. 1,640 மாணவ - மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். அதில், 1,557 பேர் தேர்ச்சி பெற்றனர். 47 மாணவர்கள், 36 மாணவியர் என, 83 பேர் தேர்ச்சி பெறவில்லை.ஜூன் 25ல் நடைபெற உள்ள துணை தேர்வில் இவர்களை எழுத வைத்து, தேர்ச்சி பெற வைத்து, கல்லுாரிகளில் சேர்க்க, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.அதேபோல், 'தேர்வு நன்றாக எழுதியிருக்கிறேன்; மதிப்பெண் இன்னும் அதிகமாக வந்திருக்க வேண்டும்; மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தால் தேர்ச்சி அடைவேன் அல்லது கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்' என்கிற நம்பிக்கையுடன் சொல்லும் மாணவர்களின் விபரங்களை சேகரித்து, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆர்.எஸ்.புரம் மேற்கு மற்றும் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்றிருக்கிறது. ரத்தினபுரி பள்ளியில் ஒரு மாணவன், மணியகாரன்பாளையம் பள்ளியில் ஒரு மாணவி தேர்ச்சி பெறாததால், நுாறு சதவீத தேர்ச்சி நழுவியிருக்கிறது. சித்தாபுதுார் பள்ளியில் இரு மாணவர்கள், ஒரு மாணவி தேர்ச்சி பெறவில்லை. செல்வபுரம் பள்ளியில் தலா இருவர் தேர்ச்சியை நழுவ விட்டுள்ளனர்.மாநகராட்சி பள்ளி மாணவர்களில், 19 பேர், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவிலும், கம்ப்யூட்டர் சயின்ஸில் மூன்று பேர், பொருளியல் ஒருவர் வீதம் மொத்தம், 23 மாணவ - மாணவியர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று, பள்ளிகளுக்கு பெருமை சேர்த்திருக்கின்றனர்.அதேநேரம், 11 பள்ளிகள் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்கின்றன. 5 பள்ளிகள், 80-89 சதவீதத்துக்குள் தேர்ச்சி பெற்றுள்ளன. பீளமேடு பள்ளி மட்டும், 77.63 சதவீதம் பெற்று, தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் இருக்கிறது. கடந்த கல்வியாண்டை காட்டிலும், 2.97 சதவீதம் தேர்ச்சி அதிகரித்திருக்கிறது. துணைத்தேர்வில் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றால், இச்சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆகவே, தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் சூட்டோடு சூடாக மாநகராட்சி அளிக்கும் பயிற்சியுடன் தேர்வுக்கு தயாரானால் வெற்றி நிச்சயம்!
அதிக தேர்ச்சிக்கு காரணம் இதுதான்!
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:தேர்ச்சியை நழுவ விட்ட மாணவர்கள், துணை தேர்வு எழுத சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் அனைவரது முயற்சியுமே தேர்ச்சி விகிதம் உயர காரணம். என்னென்ன பாடப்பிரிவுக்கு ஆசிரியர்கள் தேவை என கண்டறிந்து, மாநகராட்சி நிதியில் சம்பளம் வழங்கி, அப்பணியிடத்தை பூர்த்தி செய்தோம்.ஒவ்வொரு தேர்வு சமயத்திலும், தேர்ச்சி விகிதத்தை, ஆசிரியர்கள் மட்டத்தில் ஆய்வு செய்தோம். தேவையான பாடப்புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தோம். சிறப்பு வகுப்புகள் நடத்தி, திறனை மேம்படுத்தினோம். வரும் கல்வியாண்டுகளில் தேர்ச்சி விகிதம் இன்னும் அதிகரிக்கும். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ - மாணவியரும் உயர்கல்வியில் சேர்வதற்கான நடவடிக்கைளையும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநகராட்சி மேற்கொள்ளும்.இவ்வாறு, அவர் கூறினார்.