விஜயதசமி விழா கொண்டாட்டம்; பள்ளிகளில் வித்யாரம்பம்
- நிருபர் குழு -பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் பள்ளியில், விஜயதசமி நாளன்று, இரண்டரை வயது மழலை குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்பட்டு, ப்ரிகேஜி சேர்க்கை நடைபெற்றன. பள்ளி தாளாளர் சாந்திதேவி, குழந்தைகளின் கைவிரல்களை பிடித்து பச்சரிசியில், 'ஓம்' என்ற பிரணவ மந்திரம் முதன் முதலாக எழுத வைத்தார். மேலும், நாவில் ஸ்வர்ணத்தால், 'ஓம்' என எழுதப்பட்டது. பள்ளி செயலாளர் ரமேஷ் ராஜ்குமார், நிர்வாக இயக்குனர் ரிதன்யா, பள்ளி முதல்வர் ரேவதி, ஆசிரியர்கள் பங்கேற்றனர். குழந்தைகளுக்கு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. * உடுமலை சாந்தி மாண்டிசோரி பள்ளியில், விஜயதசமி விழாவையொட்டி, பள்ளி வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சரஸ்வதி தேவி சிலைக்கு முன், அரிசி தானியங்களில், 'அ' எழுத்தை எழுதி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தனர். ஒவ்வொரு குழந்தையின் பிரகாசமான எதிர்காலம், ஞானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற ஆசிர்வாதம் கேட்டு சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. பள்ளி செயலாளர் சாந்தகுமாரி, தாளாளர் பாலாஜி அருண்குமார் மற்றும் இயக்குனர் சுசரிதா குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர், குழந்தைகள் பக்தியுடன் ஒன்றுபட்டு விழாவை கொண்டாடினர்.