உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

அன்னுார்: குமாரபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அன்னுார் பேரூராட்சியில், குமாரபாளையத்தில், மயான பகுதியில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த மாதம் வருவாய் துறை அதிகாரிகளும், பேரூராட்சி அலுவலர்களும், அந்த நிலத்தை ஆய்வு செய்தனர். அன்னுார் பேரூராட்சியில், தினமும் 10 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிப்பதற்காக கிடங்கு அமைக்க பேரூராட்சிக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்க வருவாய் துறையினர் முன்வந்தனர். இதையடுத்து இது குறித்து பேரூராட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து குமாரபாளையம் கிராம மக்கள் நேற்று பேரூராட்சி அலுவலகம் வந்தனர். தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோரிடம், பொதுமக்கள் பேசுகையில், 'அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் அல்ல. ஊர் மக்களுக்காக ஊர் பெரியவர் ஒருவர் தானமாக கொடுத்த நிலம் இது. இங்கு பேரூராட்சியின் ஒட்டுமொத்த குப்பைகளை கொட்டினால் சுகாதாரக் கேடு ஏற்படும். எங்கள் வார்டு குப்பையை மட்டும் இங்கு கொட்டி தரம் பிரிக்கலாம். மற்ற வார்டுகளின் குப்பையை எங்கள் வார்டுக்கு கொண்டு வர அனுமதிக்க மாட்டோம்,' என்று கூறினர். தலைவர் பதிலளிக்கையில், ''உங்கள் ஆட்சேபனையை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கிறோம். உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இதையடுத்து கிராம மக்கள் அன்னுார் தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாரிடம் ஊருக்குள் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ