உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சம்பள பேச்சு வார்த்தை தொடர் இழுபறி; தோட்ட தொழிலாளர்கள் கவலை

சம்பள பேச்சு வார்த்தை தொடர் இழுபறி; தோட்ட தொழிலாளர்கள் கவலை

வால்பாறை,; ஏழாவது கட்டமாக நடந்த புதிய சம்பள பேச்சு வார்த்தையில் முடிவு எட்டாதால், வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். வால்பாறையில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்துவரும் தொழிலாளர்களுக்கு, கடந்த ஜூலை மாதம் முதல் புதிய சம்பளம் வழங்க வேண்டும். புதிய சம்பளம் வழங்குவதற்கான இருதரப்பு வார்த்தை கோவையில் நடந்தது. தனியார் தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த ஏழாவது கட்ட பேச்சு வார்த்தையில், தமிழ்நாடு தோட்ட அதிபர் சங்க நிர்வாகிகள், ஆனைமலை தோட்ட அதிபர் சங்க நிர்வாகிகள் உட் பட பலர் கலந்து கொண்டனர். தொழிற்சங்கத்தின் சார்பில், அண்ணாதொழிற்சங்க பேரவை தலைவர் அமீது, வினோத்குமார், சவுந்திரபாண்டியன் (எல்.பி.எப்.,) கருப்பையா, ராமசந்திரன் (ஐ.என்.டி.யு.சி.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,), கேசவமருகன் (வி.சி.,) உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில் தொழிற்சங்க தலைவர்கள் பேசும் போது, தினக்கூலி, 475 ரூபாய்க்கு மேல் சர்வீஸ் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஜூலை மாதம் முதல் தொழிலாளர்களுக்கு நிலுவைத்தொகை கட்டாயம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு தோட்ட அதிபர்கள் தரப்பில், தினக்கூலியுடன் சர்வீஸ் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அனைத்து எஸ்டேட் நிர்வாகத்துடன் கலந்து பேசியபின் பின் தெரிவிக்கப்படும், என்றனர். இதனையடுத்து தேதி அறிவிக்காமல் பேச்சு வார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. புதிய சம்பள பேச்சு வார்த்தைக்கான ஏழாவது கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர். நீலகிரி, வயநாடு ஆகிய பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான புதிய சம்பள பேச்சு வார்த்தையின் படி தினக்கூலியாக, 475 ரூபாய்க்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 70 சதவீதம் தொழிலாளர்களுக்கு இந்த ஒப்பந்தத்தின் படி தற்போது ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், வால்பாறையில் இந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்றும், தொழிலாளர்களுக்கு தினக்கூலியுடன், ஜூலை மாதம் முதல் நிலுவைத்தொகையும் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், பேச்சு வார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை