உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி அலுவலகத்துக்கு நடையாய் நடை: ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர்கள் புகார்

ஊராட்சி அலுவலகத்துக்கு நடையாய் நடை: ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர்கள் புகார்

அன்னுார்: 'வேலை கேட்டு இரண்டரை மாதமாக ஊராட்சி அலுவலகத்திற்கு நடக்கிறோம்' என தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர். அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிகள் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் சராசரியாக தினமும், 1,500 பேர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் முதல் வேலை வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில், தொழிலாளர்கள், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நந்தினியிடம் மனு அளித்தனர் . தொழிலாளர்கள் கூறுகையில், 'எங்களுக்கு கடந்த நிதியாண்டில் செய்த பணிக்கு இன்னும் சம்பளம் பாக்கி உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இரண்டரை மாதமாக எங்களுக்கு வேலை தரவில்லை. ஊராட்சி அலுவலகத்திற்கு நடையாய் நடக்கிறோம்.வெளியே தனியார் தோட்டங்களிலும் எங்களுக்கு வேலை இல்லை. இதனால் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு உடனடியாக 100 நாள் திட்டத்தில் எங்களுக்கு வேலை தர வேண்டும்' என்றனர். அதிகாரிகள் பதிலளிக்கையில், 'செய்ய வேண்டிய பணிகளுக்கு நிர்வாக அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. உங்களது கோரிக்கை மனு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படும். விரைவில் தொழிலாளர்களுக்கு வேலை தர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.இதையடுத்து, தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !