இப்பவே கண்ண கட்டுதே.. . ! குரூப் 4 தேர்வால் தேர்வர்கள் மிரட்சி; குரூப் 2, 2ஏக்கு விண்ணப்பிக்க தயக்கம்
கோவை : குரூப் 4 தேர்வு மிரட்சியில் இருந்து, இன்னும் தேர்வர்கள் மீளாத நிலையில், அடுத்து குரூப் 2 மற்றும் 2ஏ ஆகியவற்றுக்கு, எப்படி வினாக்கள் கேட்பார்களோ என்ற மனநிலையில் உள்ளதால், விண்ணப்பிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4-ல் உள்ள 3,935 காலிப்பணியிடங்களுக்கு, தமிழகம் முழுவதும் கடந்த 12ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கேள்விகள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டது. குறிப்பாக, தமிழ்ப் பாடக் கேள்விகள், 'சிலபஸ்'க்கு அப்பாற்பட்டு இருந்ததாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். சேலத்திலிருந்து விடைத்தாள் கொண்டு செல்லப்பட்டபோது உரிய பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அதற்கு டி.என்.பி.எஸ்.சி., மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் எனவும், மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் அ.திமு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், நடப்பாண்டுக்கான குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி உள்ள தகுதி வாய்ந்த மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஆக., 13ம் தேதி என்றும் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், கடந்த 21ம் தேதி முதல் துவங்கியுள்ளது. பயிற்சி பெற, 75 பேர் பதிவு செய்துள்ள நிலையில், இதுவரை 35 பேர் தான் பயிற்சிக்கு வந்துள்ளனர். குரூப் 4 தேர்வு தந்த மிரட்சி தான் காரணம் என, மாணவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் பலர் விண்ணப்பிக்க தயங்கி வருவதாகவும் தெரிகிறது.