மேலும் செய்திகள்
அரசு பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் அமல்
01-Jul-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் உள்ள அரசுப்பள்ளிகளில், 'வாட்டர் பெல்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.கேரளா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், 'வாட்டர் பெல்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.இத்திட்டம், தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அரசுப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், காலை, 11:00 மணி, மதியம், 1:00 மணி, மாலை, 3:00 மணி என, 'வாட்டர் பெல்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் கணேசன், மாணவர்களிடம் தண்ணீர் குடிப்பதன் அவசியம் குறித்து விளக்கினார்.மேலும், இந்த நேரம் மட்டுமின்றி மற்ற நேரங்களில் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படும், என தலைமையாசிரியர் தெரிவித்தார்.அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கூறியதாவது: தமிழக அரசின், 'வாட்டர் பெல்' திட்டம் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, காலை, 11:00 மணி, மதியம், 1:00 மணி, மாலை, 3:00 மணிக்கும், குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்காக 'பெல்' அடிக்கப்படுகிறது.பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், தினமும் ஏழு முதல் எட்டு கப் தண்ணீர் குடிக்க வேண்டும். அந்த அளவுக்கு குழந்தைகள் தண்ணீர் குடிக்காததால், வெயில் காலத்தில் தலைவலி, சிறுநீர் தொற்று ஏற்படுகிறது.நீர் குடிக்காததால் குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. தமிழக அரசின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத்திட்டம், மதிய உணவுத்திட்டம் போல, 'வாட்டர் பெல்' திட்டமும் குழந்தைகளுக்கு பயன் அளிக்கும்.காய்ச்சி வடிகட்டிய சுத்தமான தண்ணீரை குழந்தைகள் பருகும் போது, தண்ணீர் வாயிலாக ஏற்படும் தொற்று நோய்களின் பாதிப்புகள் குறையும்.இவ்வாறு, கூறினார்.
01-Jul-2025