வனவிலங்குகளின் தாகம் தீர்க்க 18 தொட்டிகளில் தினமும் தண்ணீர்
மேட்டுப்பாளையம்; இரவில் பனியும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனத்துறையினர் தினமும் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.மேட்டுப்பாளையம் வனச்சரகம், 9,780 எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. மலைப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீர், வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள மழை நீர் போன்றவைகள் வனப்பகுதியில் உள்ள மரம் மற்றும் வனவிலங்குகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன. தற்போது இரவில் பனியும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீர் குறைய தொடங்கியுள்ளது. இதனால் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், தினமும் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தண்ணீரை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க, மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், அடர் வனப்பகுதியில் உள்ள 18 தண்ணீர் தொட்டிகளில் தினமும், சோலார் சக்தியில் இயக்கும் மோட்டார் வாயிலாகவும், தண்ணீர் வண்டிகள் வாயிலாகவும் தண்ணீர் நிரப்பப்படுகிறது.தண்ணீர் நிரப்புவதற்கு முன்பாக தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகின்றன. இதில் மான், யானை, சிறுத்தை, காட்டு எருமை போன்ற வனவிலங்குகள் வந்து தண்ணீர் குடிக்கின்றன.வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதியோரம் உள்ள சாலைகள், கிராமங்களில் தீவிர ரோந்து மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.----