மேலும் செய்திகள்
மெல்ல உயர துவங்கியது சோலையாறு நீர்மட்டம்
24-May-2025
வால்பாறை : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சோலையாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்கிறது. காற்றுடன் கனமழை பெய்வதால், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் நேற்றும் பல்வேறு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சோலையாறு பஜார் பகுதியில் மளிகை கடை மீது மரம் விழுந்ததில் கடையின் முன் பகுதி சேதமடைந்தது. எஸ்டேட் பகுதியில் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்ததை, மின்வாரிய அதிகாரிகள் கண்டறிந்து, மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில், தரைமட்ட பாலத்தின் மேல் மழை வெள்ளம் பொங்கி செல்வதால், தொழிலாளர்கள் பாலத்தை கடக்க முடியாமல் தவிக்கின்றனர். வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 71.71 அடியாக இருந்தது. ஒரே நாளில் 11 அடி நீர்மட்டம் உயர்ந்து, நேற்று காலை, 82.69 அடியானது. அணைக்கு வினாடிக்கு, 3,936 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது.இதே போல், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 33.52 அடியாக இருந்தது. 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 81.5 அடியாக இருந்தது. மழை காரணமாக, பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:சோலையாறு - 95, பரம்பிக்குளம் - 95, ஆழியாறு - 9, வால்பாறை - 114, மேல்நீராறு - 127, கீழ்நீராறு - 103, காடம்பாறை - 37, மேல்ஆழியாறு - 22, சர்க்கார்பதி - 26, வேட்டைக்காரன்புதுார் - 13, துாணக்கடவு - 49, பெருவாரிப்பள்ளம் - 45, நவமலை - 13, பொள்ளாச்சி - 37 என்ற அளவில் மழை பெய்தது.
24-May-2025