கோடையில் தண்ணீர் பற்றாக்குறை வரக்கூடாது; குடிநீர் வடிகால் வாரியத்தினருக்கு அறிவுறுத்தல்
கோவை; கோவை மாவட்டத்தில், கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படக் கூடாது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வரியத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை தலைதுாக்க ஆரம்பித்திருக்கிறது. மாநகராட்சி பகுதியில் வினியோகிக்கும் நாட்களின் இடைவெளி அதிகரித்திருக்கிறது. நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை தொடர்பாக, கிணத்துக்கடவு தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தாமோதரன் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அமைச்சர் நேரு பதிலளிக்கும்போது, 'கோவை மாவட்ட குடிநீர் பிரச்னைக்கு தனி கூட்டம் நடத்தி, பிரச்னைகளை கேட்டறிந்து, தீர்வு காணப்படும்' என கூறினார்.இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் கிரண் குராலா தலைமையில், குடிநீர் பிரச்னை தொடர்பான ஆய்வு கூட்டம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு முன்னிலை வகித்தார்.கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்த அவர், கோடை காலத்தில் பற்றாக்குறையின்றி, மக்களுக்கு வினியோகிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். சிறுவாணியில் இருந்து குடிநீர் வரத்து குறைந்தாலும், பில்லுார் மூன்றாவது திட்டத்தில் பெறப்படும் அளவை வைத்து சமாளிப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.பேரூராட்சி பகுதிகளில் உள்ளூர் நீராதாரங்களை கொண்டு சமாளித்துக் கொள்ளலாம் என அத்துறையினர் கூறினர். ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தால் தேவையான அளவு சப்ளை செய்யவும், குழாய்களில் உடைப்பு இருந்தால் சரி செய்யவும் மதிப்பீடு தயாரித்து உடனடியாக ஒப்புதலுக்கு அனுப்பவும் அறிவுரை வழங்கப்பட்டது.கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் எழிலரசன், மேற்பார்வை பொறியாளர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.