கால்நடைகளுக்காக நீர்த்தொட்டி; நுாறு நாள் பணியில் புதுப்பிக்கணும்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப் பகுதி கிராமங்களில், பால் உற்பத்திக்காக, கால்நடை வளர்ப்பில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், கோடையில் நிலவும் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில், கிராமங்களில் ஆங்காங்கே தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஊராட்சி நிர்வாகம் வாயிலாக தண்ணீர் நிரப்பப்படும். மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்படும் கால்நடைகளுக்கு போதியளவு தண்ணீர் கிடைக்காத போது, தொட்டியின் வாயிலாக தாகம் தீர்த்துக் கொள்ளும். ஆனால், பல இடங்களில், இத்தகைய தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாமல் உள்ளது. அவற்றை, நுாறு நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் வாயிலாக புனரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் கூறியதாவது: அனைத்து கால்நடை மருந்தகத்திலும், சிகிச்சை மற்றும் கருவூட்டலுக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளுக்காக, குடிநீர் தொட்டி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகள், பகலில் நிலவும் கடும் வெயில் காரணமாக, உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, செரிமானக் கோளாறால் பாதிக்கும். இதனை தடுக்கும் வகையில், அந்தந்த ஒன்றியம் வாயிலாக நிதி ஒதுக்கீடு செய்து, கிராமங்களில் ஆங்காங்கே தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் நிரப்பப்பட்டும் வந்தன. தற்போது, பெருமளவு தொட்டிகள் காணாமல் போய் விட்டன. அவற்றை புனரமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.