உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானை வழித்தடத்தை மீட்கணும்! இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

யானை வழித்தடத்தை மீட்கணும்! இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

வால்பாறை: உயர் நீதிமன்ற உத்தரவு படி, யானை வழித்தடங்களை கண்டறிந்து அங்குள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும், என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், அதிக அளவில் யானைகள் உள்ளன. யானைகள் ஆண்டாண்டு காலமாக இடம்பெயர்ந்து செல்லும் வழியை மறித்து தேயிலை, காபி, ஏலம், மிளகு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. சமீப காலமாக, யானை வழித்தடத்தில் சொகுசு விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், யானைகள் வழித்தடத்தை மீட்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள், கோவை மாவட்ட வனப்பகுதியில் யானைகள் வழித்தடம் அதிகளவில் உள்ளன. வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், யானை திசை மாறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன. எனவே, யானைகள் வழித்தடத்தை கண்டறிந்து மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: வால்பாறையில், சமீப காலமாக யானை - மனித மோதல் அதிகமாக உள்ளது. இதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், கோவை மாவட்டம் வால்பாறையிலும் யானைகள் வழித்தடங்களை கண்டறிந்து, அவற்றை மீட்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் யானைகள் நுழைவதை தடுக்கப்பதுடன், யானைகளால் ஏற்படும் சேதங்களையும் தடுக்க முடியும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி