நுாலகம் சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளணும்!
பொள்ளாச்சி; ''நுாலகம் சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என, பொள்ளாச்சி அரசு கல்லுாரியில் நடந்த விழாவில் எம்.பி., ஈஸ்வரசாமி பேசினார்.பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கல்லுாரி நாள் விழா, விளையாட்டு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். உடற்கல்வித்துறை (பொ) நிர்மலாதேவி விளையாட்டு அறிக்கையை படித்தார்.எம்.பி., ஈஸ்வரசாமி பேசுகையில், ''படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். மொபைல்போன் பயன்பாடு அதிகரித்த பின், மாணவர்கள் நுாலகங்களுக்கு செல்வது குறைந்துள்ளது.என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நுாலகங்கள் சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அது உங்களை உயர்வடையச்செய்யும்.தமிழக முதல்வர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தமிழகம் முதன்மை மாநிலமாக மாறி வருகிறது,'' என்றார்.நகராட்சி தலைவர் சியாமளா பேசுகையில், ''மாணவர்கள், மன அழுத்தமின்றி படிக்க வேண்டும். மன அழுத்தம் தவிர்த்தாலே பல பிரச்னைகள் தீர்ந்து விடும். தமிழகத்தில் பெண்கள் கல்வி பயில அனைத்து வசதிகளும் உள்ளன,'' என்றார்.தொடர்ந்து, கல்லுாரிக்கு உதவிகளை செய்வோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆங்கிலத்துறை தலைவர் செந்தில்நாயகி நன்றி கூறினார். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.