பூசாரிநாயக்கன் ஏரிக்கு நீர் திறக்க அரசாணையால் ராஜினாமா செய்வோம்! ரத்து செய்ய வலியுறுத்தி திட்டக்குழு ஆவேசம்
பொள்ளாச்சி; 'பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறக்கும் அரசாணையை ரத்து செய்ய பரிந்துரை செய்யாவிட்டால், திருமூர்த்தி திட்டக்குழுவினர் ராஜினாமா செய்யும் நிலை ஏற்படும்,' என, அதிகாரிகளிடம் ஆவேசமாக தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், திட்டக்குழு அனுமதியில்லாமல், அரசுக்கு பரிந்துரை செய்து பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறக்க அரசாணை பெற்றதை ரத்து செய்யக்கோரி திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு வலியுறுத்தியது. மேலும், திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள், பாசன சபை தலைவர்கள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:பி.ஏ.பி., பாசன திட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் ஏரிக்கு இந்தாண்டு மட்டும், இரண்டாவது முறையாக கண்காணிப்பு பொறியாளர் பரிந்துரை செய்து, நேற்று (7ம் தேதி) முதல் மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசாணை பெறப்பட்டது. இது, திருமூர்த்தி திட்டக்குழு, கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருமூர்த்தி அணையில் இருந்து, பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் வழங்குவது குறித்து, கடந்த, 2008ல் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டக்குழு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் மேல்முறையீட்டில், திருமூர்த்தி அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி பாரதபுழா ஆற்றில் தண்ணீர் கலக்கும் சூழ்நிலையில், பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் வழங்கலாம் என, கடந்த, 2023ம் ஆண்டு, ஏப்.,மாதம், 17ம் தேதி உயர்நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்தது.இந்தாண்டு, இரண்டாம் மண்டல பாசனம் நடைபெறும் போது மழைப்பொழிவு ஏற்பட்டு திருமூர்த்தி அணை நிரம்பி உபரிநீர் வெளியேறும் நிலையில், திட்டக்குழுவிடம் அனுமதி பெற்று, அரசாணை பெற்று பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் விடப்பட்டது.தமிழ்நாடு விவசாயிகள் நீர்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம் விதி,23ன்படி, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவின் சம்மதம் இல்லாமல், திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை எதுவும் செய்யக்கூடாது, என, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கடந்த, 2012ம் ஆண்டு தெளிவான அறிவுரை வழங்கியுள்ளார்.திருப்பூர் மாவட்ட கலெக்டரின் கடிதங்கள், உயர்நீதிமன்ற தீர்ப்புகள், சட்டம், விதிகள் ஆகியவற்றை புறந்தள்ளி பூசாரிநாயக்கன் ஏரிக்கு இந்தாண்டு இரண்டாவது முறையாக, சட்டத்துக்கு புறம்பாக தண்ணீர் விட அரசாணை பெறுவதற்கு பரிந்து செய்துள்ளதை ஏற்க இயலாது. இந்த செயலால் வேதனை அடைந்துள்ளோம்.இந்த அரசாணையை நிறுத்தி வைத்து, ரத்து செய்வதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என, திருமூர்த்தி அணை நான்கு லட்சம் ஏக்கர் பாசன விவசாயிகள் சார்பாக கேட்டுள்ளோம். இதற்கு அதிகாரிகள், அரசாணை நிறுத்தி வைப்பதாகவும், உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு, கூறினார்.
சட்டம் ஒழுங்கு பாதிக்கும்!
பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் வழங்கும் அரசாணையை நிறுத்தி வைக்காவிட்டாலோ, அரசாணையை ரத்து செய்வதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யாமல் புறக்கணித்தாலோ, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவினர் தங்களது பதவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலை ஏற்படும்.அவ்வாறு சூழல் ஏற்படும் பட்சத்தில் திருமூர்த்தி அணை பாசன பகுதிகளில் மிகுந்த சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். திருமூர்த்தி அணை பாசன பகுதியான, 10 சட்டசபை தொகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என, திட்டக்குழு தலைவர் தெரிவித்தார்.