உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம்

மருதமலை முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம்

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. முருகனின் ஏழாம் படை வீடாக,மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் கருதப்படுகிறது. இக்கோயிலில், கடந்த அக்., 22ம் தேதி, காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும், யாகசாலை பூஜை, அபிஷேக ஆராதனை, திருவீதிஉலா நடந்தது. கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாளில், சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு, கோபூஜையுடன் நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி, ரத்ன அங்கியில் பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். காலை, 11:15 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், வெகு சிறப்பாக நடந்தது. அதன்பின், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மலர் பல்லக்கில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், பக்தர்கள் மொய் பணமாக, 97,044 ரூபாய் வசூலானது. கந்த சஷ்டி விழாவையொட்டி, விரதம் இருந்த பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ