மேலும் செய்திகள்
புறவழிச்சாலை திட்டம் விரைவுபடுத்த எதிர்பார்ப்பு?
26-Sep-2025
கோவை: கோவையில், மேற்குப்புறவழிச்சாலை முதல்கட்ட பணி முடிவடைய உள்ள நிலையில், 2ம் கட்டம் மற்றும் 3ம் கட்டத்துக்கு ஆணையம் தரப்பில் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விடுமோ என்கிற அச்சம் உருவாகியிருக்கிறது. மதுக்கரை அருகே மைல்கல்லில் துவங்கி, நரசிம்மநாயக்கன் பாளையம் வரை, 32.43 கி.மீ., மேற்குப்புறவழிச்சாலை அமைய வேண்டும். மூன்று கட்டமாக இவ்வேலை பிரிக்கப்பட்டது. முதல்கட்டமாக, மைல்கல் முதல் மாதம்பட்டி வரை, 11.80 கி.மீ., வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் இருக்கிறது. மீதமுள்ள இரண்டு கட்டங்களுக்கு, தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அப்பகுதிகளில் சாலை அமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு ஏற்கனவே கருத்துரு அனுப்பியது. சாத்தியக்கூறு ஆய்வு இப்பணியையும், கிழக்குப்புற வழிச்சாலை திட்டத்தையும், மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வசம், தமிழக அரசு ஒப்படைத்தது. ஆணையம் தரப்பில், தனியார் ஆலோசனை நிறுவனம் நியமிக்கப்பட்டு, இவ்விரு திட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. ஏற்கனவே நிலம் கையகப்படுத்தி, மதிப்பீடு தயாரித்து, பணிகள் துவங்க இருந்த சமயத்தில், சாத்தியக்கூறுகளை மீண்டும் ஆய்வு செய்ய ஆரம்பித்திருப்பது, மேற்குப்புறவழிச்சாலை முழுமையான திட்டம் செயல்பாட்டுக்கு வர, மேலும் தாமதமாகுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் இத்திட்டத்தில், 32.43 கி.மீ.க்கு நான்கு வழிச்சாலை ஏற்படுத்தினால் மட்டுமே நகரப்பகுதிக்குள் கனரக வாகனங்கள் வராமல் இருக்கும். அதாவது, மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவுக்கு, காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து மேற்குப்புறவழிச்சாலையில் மைல்கல் வரை, பாலக்காடு ரோட்டை எளிதாக வந்தடையலாம். நகர போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்லலாம். தொழில்துறை விருப்பம் ஆனால், ஒரே ஒரு கட்டத்தில் மட்டும் பணியை நிறுத்தினால், அவ்வழித்தடத்தை கனரக வாகனங்கள் பயன்படுத்தாமல், நகர் பகுதி வழியாகவே வழக்கம்போல் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, மீதமுள்ள இரண்டு கட்ட பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஆணைய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மேற்குப்புறவழிச்சாலைக்கு சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அறிக்கை பெறப்படவில்லை' என்றனர். மாநில நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டதற்கு, 'மேற்குப்புறவழிச்சாலை 2ம் கட்டம், 3ம் கட்டத்துக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை சமர்ப்பித்த திட்ட அறிக்கையில், நான்கு வழிச்சாலை அமைவதற்கான மதிப்பீட்டை குறிப்பிட்டுள்ளோம். ஆணையம் தரப்பில் அப்பணி மேற்கொண்டால், இன்னும் விசாலமாக இடம் தேவை. சுங்கச்சாவடி அமையும் இடங்களில், கூடுதலாக இடம் தேவைப்படும் என்பதால், நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். மதிப்பீடு மாறுபடும். அதற்காக சாத்தியக்கூறு மீண்டும் ஆராயப்படுகிறது' என்றனர்.
26-Sep-2025