மேலும் செய்திகள்
தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி தான்
23-Sep-2024
கோவை : தி.மு.க.,வின் மக்கள் விரோத ஆட்சியால், அனைத்துத் தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். 3 ஆண்டுகளில் கோவைக்குத் தந்த ஒரு திட்டத்தை, தி.மு.க.,வால் கூற முடியுமா என, முன்னாள் அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.அ.தி.மு.க., கோவை புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு, மாநகர் மாவட்டக் கழகம் சார்பில், ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது.இதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:
எப்போதெல்லாம் கட்சி சரிவைச் சந்திக்கிறதோ, அடுத்து அதை விட பெரு வெற்றி பெறும். அதுதான் வரலாறு. பென்னாகரம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு 3வது இடம் கிடைத்தபோது, அ.தி.மு.க., அழிந்துவிட்டது என்றார் அழகிரி. ஊடகங்களும் கடுமையாக விமர்சித்தன. 2011ல் அருமையாக கூட்டணி அமைத்து 200க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றினார் ஜெயலலிதா.கடந்த லோக்சபா தேர்தல் மோடியா, ராகுலா என்பதற்கானது. நம்மிடம் பிரதமர் வேட்பாளர் இல்லை. 21 சதவீத ஓட்டுப் பெற்றோம். இது சட்டசபைத் தேர்தலில், 30க்கும் கூடுதலாக அதிகரிக்கும். 2026 தேர்தல், தி.மு.க.,வா, அ.தி.மு.க.,வா என்றுதான் இருக்கும். அ.தி.மு.க., தலைமையில் மிகப்பெரும் கூட்டணி அமையும். இ.பி.எஸ்., முதல்வராவது நிச்சயம்.தி.மு.க.,வின் மக்கள் விரோத ஆட்சியால், அனைத்துத் தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். விமர்சனங்கள் வரலாம்; அதைப் புறம் தள்ளுங்கள்.அ.தி.மு.க., ஆட்சியில்தான் தமிழகத்துக்கும், கோவைக்கும் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம். 3 ஆண்டுகளாக, தி.மு.க., கோவைக்குக் கொண்டு வந்த ஒரு திட்டத்தைக் கூற முடியுமா?மின்கட்டண உயர்வு, ஆண்டுக்கு 6 சதவீத சொத்துவரி உயர்வு, கட்டத் தவறினால் அபராத வட்டி என, தி.மு.க., அரசு மக்களை இம்சிக்கிறது. மீண்டும் அ.தி.மு.க.,தான் ஆட்சியமைக்கும். தி.மு.க., செய்யாத திட்டங்களை, நாம் மீண்டும் செயல்படுத்துவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.வழக்கறிஞர் பிரிவு தலைவர் சேதுராமன், முன்னாள் எம்.பி., ஜெயவர்தன், எம்.எல்.ஏ.,க்கள் தாமோதரன், அம்மன் அர்ச்சுனன், அருண்குமார், ஜெயராமன், அமுல்கந்தசாமி, கந்தசாமி, முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி, உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
23-Sep-2024