உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொத்து வாங்குவதற்கு முன் என்னென்ன கவனிக்கணும்?

சொத்து வாங்குவதற்கு முன் என்னென்ன கவனிக்கணும்?

‛எந்த சொத்துக்களை வாங்க வேண்டும்; எந்த சொத்துக்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், சில விஷயங்கள் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டிய வீட்டை வாங்கும் போது, கிரைய ஆவணத்தில் கட்டடம் பற்றிய சகல விபரங்களையும் குறிப்பிட வேண்டும். சொத்தின் வரி விதிப்பு எண், மின் இணைப்பு எண், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் வார்டு எண் உட்பட அனைத்து தகவல்களும் இடம் பெற வேண்டும். அவ்வாறு குறிப்பிடாவிட்டால், பின்னாளில் பெயர் மாற்றம் செய்யும் போது சிக்கல் ஏற்படலாம். பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து, கோவை வக்கீல் நாகராஜன் கூறியதாவது:பூமியாக இருந்து மனையாக பிரிக்கப்பட்ட பின், பதிவு செய்யப்பட்ட அனைத்து அசல் ஆவணங்களையும், சொத்தை கடைசியாக வாங்குபவரிடம் ஒப்படைக்க வேண்டும். அதாவது, ஒரு சிலர் சொத்தை, விற்பவரின் அசல் கிரைய ஆவணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு கிரையம் பதிவு செய்கின்றனர். இது சரியல்ல. விற்பவரின் ஆவணத்தில் அவர் வாங்கும் போது கிரையத்திற்கு ஆதரவாக, என்னென்ன அசல் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அவை, அனைத்தும், விற்பவரின் வசம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். இதில், ஏதாவது ஒரு அசல் ஆவணம் கைவசம் இல்லை என்றாலும் பிற்காலத்தில் சிக்கல் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது.நீர் நிலை ஆக்கிரமிப்பு, ஓடை பள்ளவாரி, அரசு புறம்போக்கு மற்றும் பஞ்சமி நிலமாக இருக்க கூடாது மற்றும் பல்வேறு அரசு துறைகளான நெடுஞ்சாலை துறை, வீட்டு வசதி துறை, விமான நிலைய விரிவாக்கம் ஆகியவற்றுக்காக நில ஆர்ஜித நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என்பவற்றை விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால், அச்சொத்துக்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதை தெரிந்து கொள்ள பொதுமக்கள் வாங்க இருக்கும் சொத்தின் புல எண்ணுடன் கூடிய லேஅவுட் வரைபடத்தை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாகி அலுவலரிடம் காண்பித்து இவற்றின் தெரிந்து கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட்டில் விடப்பட்டுள்ள பொது ஒதுக்கீட்டு இடத்தையும் போலியாக, ஒரு மனை எண்ணையும், அந்த லே-அவுட் அங்கீகார எண்ணை குறிப்பிட்ட ஒரு சிலர் விற்பனை செய்வதை பார்க்க முடிகிறது. இது சட்டவிரோதம். இதை சரிபார்க்க, லேஅவுட் அனுமதி வழங்கிய டி.டி.சி.பி., அல்லது எல்.பி.ஏ., அலுவலகத்தில், லே-அவுட்டின் சான்றிடப்பட்ட நலலை பெற்று சரிபார்த்து, ஊர்ஜிதம் செய்து கொண்டு மனை வாங்க வேண்டும். லே-அவுட் அங்கீகார நிபந்தனை படிவத்தையும் கிரைய ஆவணத்துடன் இணைத்து, பதிவுக்கு தாக்கல் செய்ய வேண்டும். லே-அவுட் அங்கீகார எண் அல்லது மனை வரைமுறை உத்தரவு பற்றிய குறிப்புகளும் கட்டாயம் இடம் பெற வேண்டும். சொத்தின் பட்டா உரிமையாளர் பெயரில் உள்ளதா, சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவை நிலுவையின்றி செலுத்தப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். லே-அவுட் அங்கீகார எண் அல்லது மனை வரைமுறை உத்தரவு பற்றிய குறிப்புகளும் கட்டாயம் இடம் பெற வேண்டும். சொத்தின் பட்டா உரிமையாளர் பெயரில் உள்ளதா, சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவை நிலுவையின்றி செலுத்தப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை