உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் கட்டடத்தை எப்ப திறப்பீங்க! மின் இணைப்புக்காக காத்திருப்பு என தகவல்

ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் கட்டடத்தை எப்ப திறப்பீங்க! மின் இணைப்புக்காக காத்திருப்பு என தகவல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் கட்டுமானப்பணிகள் முடிந்தும், இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. மின் இணைப்பு வழங்கப்படாததால், திறப்பு விழா நடக்காமல் உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 50க்கும் மேற்பட்ட கோழி கடைகள், 30க்கும் மேற்பட்ட ஆடு இறைச்சி கடைகள், 15க்கும் மேற்பட்ட மீன்கடைகள், 10க்கும் மேற்பட்ட, மாட்டிறைச்சி கடைகளும் உள்ளன. அதில், மீன் இறைச்சி, கருவாடு கடைகள், காந்தி மார்க்கெட், தேர்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படுகின்றன.கோழி கடைகள் நகரில் பல இடங்களிலும்; மாட்டிறைச்சி, ஆடு இறைச்சி கடைகள் கோட்டூர் ரோடு பகுதிகளிலும் செயல்படுகிறது.மீன் கடைகளின் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட ஐஸ் கட்டி போன்றவை அப்புறப்படுத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது. கழிவுகள் முறையாக அகற்றாவிட்டால் துர்நாற்றம் வீசுகிறது.கோழி இறைச்சி கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் ரோட்டோரம் வீசப்படுகின்றன. இதற்காக, ஆடு, மாடு, மீன், கோழி இறைச்சி விற்பனைக்கு, காந்தி மார்க்கெட் அருகே புதிய கடைகள் அமைக்க திட்டமிட்டு இறைச்சி விற்பனையாளர்களிடம் கருத்து கேட்டறியப்பட்டது. அதன்பின், பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.நகரின் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 'ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, மீன் மார்க்கெட் கட்டுவதற்காக, தமிழக அரசு கலைஞரின் நகர்புற வளர்ச்சி திட்ட நிதி, நகராட்சி பொது நிதி என, மொத்தம், 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.இதற்காக, காந்தி மார்க்கெட் அருகே, 83 சென்ட் பரப்பளவில் மீன் மார்க்கெட் கட்டும் பணிகள் கடந்த 2023ல் துவங்கப்பட்டது. அதில், இறைச்சிகளை கழுவி சுத்தம் செய்ய கடைகளும் கட்டப்பட்டன. மொத்தம், 48 கடைகள் கட்டப்பட்டுள்ளன.பொதுமக்களுக்கு தேவையான மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, கடை கட்டுமான பணிகள் முடிவடைந்தும் திறக்கப்படாமல் உள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'நகராட்சி பகுதியில், ஒருங்கிணைந்த இறைச்சி வளாகம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. முதற்கட்டமாக, ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் கட்டப்பட்டது. கட்டடம் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.இதனால், அப்பகுதி புதர் மண்டி காணப்படுகிறது. மேலும், கட்டடத்தில் அடிக்கப்பட்ட பெயின்ட் பெயர்ந்து பொலிவிழந்த கட்டடம் போன்று காட்சியளிக்கிறது.மீன் மார்க்கெட் கட்டடம் திறக்கப்பட்ட பின், அனைத்து கடைகளும் ஒரே இடத்தில் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

விரைவில் திறக்கப்படும்!

நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:கலைஞர் மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொது நிதி என மொத்தம், 90 லட்சம் ரூபாய் நிதியில் மீன் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. மின் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மின் இணைப்பு பெற்றதும், டெண்டர் விடப்பட்டு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். பயன்பாட்டுக்கு மீன் மார்க்கெட் திறந்த பின், நகரின் மற்ற இடங்களில் மீன் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படாது. ஒரே இடத்தில் தான் கடைகள் வைக்க வேண்டும்.மார்க்கெட்டில் ஒரு கடை, வெளிப்பகுதியில் ஒரு கடை என செயல்படுத்தவும் அனுமதியில்லை.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை