உக்கடம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பது எப்போது? நிதித்துறை ஒப்புதலுக்காக காத்திருப்பு
கோவை; 'உக்கடம் பஸ் ஸ்டாண்ட் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்' என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். உடனே, கோவை மாநகராட்சி வடிவமைப்பு தயாரித்து, பணிகளை துவக்கியது.உக்கடம் பஸ் ஸ்டாண்டில் மேம்பாலம் கட்டுமான பணிக்காக, பஸ் ஸ்டாண்ட் செயல்பட்ட இடத்தில் துாண்கள் அமைக்கப்பட்டதால், பரப்பளவு சுருங்கியிருக்கிறது. போதுமான பஸ்கள் நிறுத்தவும், பயணிகள் காத்திருக்கவும் இட வசதியில்லை.பஸ் ஸ்டாண்ட்டை மறுசீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இப்பணியை மேற்கொள்ள, ரூ.20 கோடி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.வெளியூர் பஸ்கள் நிற்க ஓரிடம்; டவுன் பஸ்கள் நிற்க ஓரிடம் என இரண்டு முனையங்களாக பஸ் ஸ்டாண்ட் அமைக்க, மாநகராட்சி திட்ட அறிக்கை தயாரித்திருக்கிறது.செல்வபுரம் ரோட்டில் மேம்பாலம் இறங்கு தளம் அருகே உள்ள காலியிடத்தில், ஒரே நேரத்தில், 28 பஸ்கள் நிறுத்துவதற்கு வசதி செய்யப்படும்.இப்பகுதியில் ஏழு கடைகளுடன் வணிக வளாகம், 10 பெட்டிக்கடைகள், கழிப்பறை, பயணிகள் ஓய்வறை, உணவகம், பயணச்சீட்டு முன்பதிவு அறை, கண்காணிப்பு அறை அமைக்கப்பட உள்ளன.பஸ் ஸ்டாண்ட் தற்போது செயல்படும் இடத்தில், 30 பஸ்கள் நிறுத்த வசதி செய்யப்படும். வணிக வளாகம், பெட்டிக்கடைகள், கழிப்பறை, பயணிகள் ஓய்வறை, உணவகம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன. பெரிய குளத்துக்கு அருகே பஸ் ஸ்டாண்ட் அமைந்திருப்பதால், கட்டுமான பணியில் சிக்கல் எழக்கூடாது. பணிகளை மேற்கொள்ளும் முன், மண்ணின் இலகுதன்மை பரிசோதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வந்தார்கள் ஐ.ஐ.டி.,குழுவினர்
சென்னையில் இருந்து ஐ.ஐ.டி., குழுவினர் வரவழைக்கப்பட்டு, உக்கடம் மற்றும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டுகளை மறுசீரமைப்பு செய்வதற்கு, என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கருத்து கேட்டறியப்பட்டது.அதற்கு, 15 அடி ஆழத்துக்கு 'பேஸ்மட்டம்' போட வேண்டுமென, ஐ.ஐ.டி., குழு கூறியிருக்கிறது. அதன்படி, திட்ட மதிப்பீடு திருத்தம் செய்யப்பட்டு, நிதித்துறை ஒப்புதலுக்காக கோப்பு அனுப்பப்பட்டது; இன்னும் நிதி ஒதுக்காததால், அப்பணி கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
அரசாணைக்கு வெயிட்டிங்
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''உக்கடம் பஸ் ஸ்டாண்ட் தொடர்பாக, ஐ.ஐ.டி., குழு கொடுத்த அறிக்கை அடிப்படையில் மதிப்பீடு தயாரித்து, சென்னைக்கு அனுப்பப்பட்டது. நிதித்துறை ஒப்புதல் கொடுத்து, அரசாணை வெளியிட்டதும், 'டெண்டர்' கோரப்பட்டு, பணிகள் துவக்கப்படும்,'' என்றார்.