உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விருப்ப  மாறுதல் கலந்தாய்வு எப்போது மாநகராட்சி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

விருப்ப  மாறுதல் கலந்தாய்வு எப்போது மாநகராட்சி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 83 ஆரம்பப்பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள், 17 மேல்நிலைப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். காலி பணியிடங்களை நிரப்புவதற்கு முன், விருப்ப இட மாறுதல் வழங்குவது வழக்கம். ஆனால், மூன்று ஆண்டுகளாக இட மாறுதல் அளிக்கவில்லை என்கிற மனக்குறை ஆசிரியர்கள் மத்தியில் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஜூலை மாதம் விண்ணப்பம் பெறப்பட்டது; 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தாங்கள் விரும்பும் பணியிடத்துக்கு மாறுதல் கேட்டு, மனு கொடுத்தனர். ஜூலை 31க்குள் மாறுதல் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏதேனும் ஒரு காரணத்தை கூறி, கல்வி பிரிவினர் ஒத்திவைத்துக் கொண்டே வருகின்றனர். அக். மாதமே முடியப் போகிறது. அம்மனுக்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. இச்சூழலில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்ட செயலாளர் வீராசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் நேற்று கோரிக்கை மனு கொடுத்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளாக பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை; இவ்வாண்டு நடத்த வேண்டும். மாநகராட்சி கல்வி அலுவலர் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.மாநகராட்சி கல்வி அலுவலர் பள்ளிப்பார்வைக்கு செல்லும் இடங்களில் ஆசிரியர்களை ஒருமையில் பேசுகிறார். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணியில் உள்ள ஆசிரியர்களை, பணி விடுவிப்பு செய்ய வேண்டும். மாறாக, அவர்களிடம் விளக்கம் கேட்டுப் பெறுவதை கண்டிக்கிறோம். ஆய்வுக்கு வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி கல்வி அலுவலர் உள்ளிட்டோர் ஆசிரியர்களை மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். இப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். இல்லையெனில், இயக்க நடவடிக்கைக்கு அமைப்பு செல்லும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை