தென்னையில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல்; தீர்வு காண அக்டோபரில் நடக்கிறது கலந்தாய்வு
கோவை; 'தென்னையை தாக்கும் வெள்ளை ஈ பிரச்னைக்கு, அக்., முதல் வாரத்தில், விஞ்ஞானிகள், வேளாண் துறை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்படும்' என, வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்தார். விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். இதில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். தென்னை மரத்தில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. நீண்ட காலமாக இதன் பாதிப்பு இருந்தாலும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. சமீபகாலமாக மீண்டும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, “வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் அலுவலர்கள், தென்னை வளர்ச்சி வாரியத்தினர், விவசாயிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் வரும் அக்., முதல் வாரத்தில், பொள்ளாச்சி அல்லது கோவையில் நடத்தப்படும். இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்” என்றார். மஞ்சள் சோளம் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில், பாரம்பரிய மஞ்சள் சோளம் கால்நடைக்கான உலர் தீவனமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்பகுதிக்கு ஏற்ற உலர் தீவனாக இருந்து வந்தது. தற்போது மஞ்சள் சோளம் அருகி வருகிறது. வேளாண் துறை சார்பில் வெள்ளைச் சோளம் மாற்றுப்பயிராக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், மஞ்சள் சோளம் அளவுக்கு இல்லை. உலர் தீவன பயன்பாட்டுக்காக, மஞ்சள் சோளம் போதிய அளவில் கிடைக்க உறுதி செய்ய வேண்டும். கனிமவளம் பொள்ளாச்சி, மதுக்கரை, சூலுார், தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு உள்ளிட்ட இடங்களில் இருந்து கேரளாவுக்கு தொடர்ந்து ஜல்லி, செயற்கை மணல் போன்றவை கடத்தப்படுகின்றன. உள்ளூர் பயன்பாட்டுக்கு இவை கிடைப்பது அரிதாகி விட்டது. கனிமவள திருட்டுக்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். கனிமவள கொள்ளையைத் தடுக்க வேண்டும். காட்டு யானை பிரச்னை காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பயிர், உயிர் சேதங்களை விளைவிப்பது தொடர்கிறது. வனத்துறையினர் கூடுதல் சிரத்தை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும். வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு, கர்நாடகாவில் வழங்கப்படுவது போல், ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ஷர்மிளா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.