உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க.,வினர் ஆக்கிரமித்த இடம் யாருக்கு சொந்தம்! வருவாய், நகராட்சி அதிகாரிகளுக்கே தெரியவில்லை

தி.மு.க.,வினர் ஆக்கிரமித்த இடம் யாருக்கு சொந்தம்! வருவாய், நகராட்சி அதிகாரிகளுக்கே தெரியவில்லை

வால்பாறை; வால்பாறையில், அரசு நிலத்தை நுாதன முறையில் கையகப்படுத்த, தி.மு.க.,வினர் திட்டம் தீட்டி வருவதை, அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில், ஆளும்கட்சியினர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை நகராட்சி சமுதாய நலக்கூடத்தையொட்டி உள்ள இடத்தை, ஆளும்கட்சியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இது குறித்து, அ.தி.மு.க., அவைத்தலைவர் பாலு, தாசில்தாருக்கு அனுப்பியுள்ள மனுவில், 'வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சமுதாயநலக்கூடத்தையொட்டி, 25 சென்ட் இடத்தை தி.மு.க.,வை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து, தகர கொட்டகை அமைத்துள்ளனர்.மேலும், மேற்படி இடத்துக்கு போலி பட்டாவும் பெற முயற்சித்து வருகின்றனர். அவர்களின் அத்துமீறலுக்கு அரசு துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.எனவே, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமிப்புக்களையும் உடனடியாக அகற்ற வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,'வால்பாறை நகராட்சி சமுதாயநலக்கூடத்தின் முன்பாக, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்துக்கும், வருவாய்த்துறைக்கும் சம்பந்தமில்லை. கடந்த, 2010ம் ஆண்டில் வருவாய்த்துறை வசம் இருந்த, 5 ஏக்கர் நிலம் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அந்த இடத்தில் தான் சுற்றுலா பயணியருக்காக, 'யாத்திரை நிவாஸ்', சமுதாய நலக்கூடம், படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் தான் அகற்ற வேண்டும்,' என்றனர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சமுதாயநலக்கூடத்தின் முன்பாக, ஆக்கிரமித்து ெஷட் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கும், நகராட்சிக்கும் சம்பந்தமில்லை. அந்த இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது. அதனால், வருவாய்த்துறை அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.வால்பாறை நகரப்பகுதியில், தி.மு.க.,வினர் அரசு நிலத்தை அப்பட்டமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுதொடர்பாக புகார் எழுந்துள்ள நிலையில், வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் தரப்பில், பொறுப்பின்றி உள்ளனர். அந்த இடம் யாருக்கு சொந்தமானது என்றே தெரியாத நிலையில், அரசு துறை நிர்வாகம் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.துறை அதிகாரிகள் நன்கு ஆலோசித்து, ஆக்கிரமிப்பு செய்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை கண்டறிவதற்குள், தி.மு.க.,வினர் நிரந்தர கட்டடம் கட்டினாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ