பிடித்தம் செய்யப்படுவது ஒரே தொகை வழங்கும்போது மட்டும் ஏன் குறை? குடும்ப நல நிதி வினியோகத்தில் அதிருப்தி
கோவை, ; அரசு, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், பணியில் இருப்பவர்களுக்கும் குடும்ப நல நிதி வழங்குவதில் பாரபட்சம் காண்பிக்கப்படுவதாக, ஓய்வூதியதாரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஓய்வூதியம் பெறுபவர்களும், பணியில் இருப்பவர்களும் இறக்கும் போது அரசு தரப்பில் அவர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதி வழங்கப்படுகிறது. இதற்காக, மாதந்தோறும் ஊதியத்தில், 150 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. ஓய்வூதியத்தில் இருந்தும், பணிபுரிபவர்களுக்கு ஊதியத்தில் இருந்தும் சமமான அளவு பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் குடும்ப நல நிதியில், பாரபட்சம் காட்டப்படுவதாக அவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றவர்கள் நல அமைப்பு தலைவர் ஞானப்பிரகாசம் கூறுகையில், ''குடும்ப நலநிதி வழங்க, ஒவ்வொருவரிடமும் மாதம், 150 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், ஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்தாருக்கு 50 ஆயிரம் ரூபாயும், பணியில் இருப்பவர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்தாருக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது. ஒரே அளவில் பிடித்தம் செய்யும் போது, நிதி வழங்குவதில் மட்டும் பாரபட்சம் காண்பிப்பது சரியல்ல. ஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்தால், அவர்களின் குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாயாவது வழங்கப்பட வேண்டும்,'' என்றார்.