உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவைபுதுார் சாலை முழுவதும் மண் குழாய் பதித்த பிறகும் அகற்றாதது ஏன்?

கோவைபுதுார் சாலை முழுவதும் மண் குழாய் பதித்த பிறகும் அகற்றாதது ஏன்?

உருவாகும் குப்பைக்கிடங்கு

அவிநாசி ரோடு, கொடிசியாவுக்கு எதிர்புறம் உள்ள ஹவுசிங் போர்டு காலியிடத்தில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. பெரிய, பெரிய மூட்டைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச்செல்கின்றனர். சிலர் குப்பையை தீயிட்டு கொளுத்துவதால் எழும் கரும் புகையால், குடியிருப்புவாசிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.- கதிர்வேல், பீளமேடு.

வாகனஓட்டிகளுக்கு கடும் சிரமம்

கோவைபுதுார், 90வது வார்டு, சாந்தி ஆஷ்ரம் முதல் சிவன் நகர் வரையில், குழாய் பதிப்பிற்காக சாலை தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்னரும் சாலையை சீரமைக்காமல், அதிகளவு மண்ணை சாலையிலேயே விட்டுச்செல்கின்றனர். நடந்து செல்வோரும், வாகனஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.- பிராபகரன், கோவைப்புதுார்.

பெயரில்லா தெருக்கள்

பி.என்.புதுார், 42வது வார்டு, பொன்னுசாமி நகர், பொன்னுசாமி நகர் விரிவு, ரெங்கசாமி நகர், ஜெகதீஸ்நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. எந்த இடத்திலும் இடத்தின் பெயர் குறித்த பலகைகள் இல்லை. இதனால், இப்பகுதிக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். பெயர் பலகைகள் நிறுவப்பட வேண்டும்.- ரவீந்தரன், பொன்நகர்.

3. இரவில் பாதுகாப்பில்லை

கிழக்கு மண்டலம், காந்திமாநகர், 25வது வார்டு, 'எஸ்.பி - 14, பி -5' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த 10 நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் பணி முடிந்து வரும் பெண்கள், முதியவர்கள் அச்சத்துடனே வருகின்றனர். வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன.- ராஜா, காந்திமாநகர்.

புதரால் மறையும் சாலை

உருமாண்டம்பாளையம் ரயில்வே கேட் முதல், வித்யாலயம் பள்ளி சாலையில், சவுபர்னிகா ஸ்பந்தன் அபார்ட்மென்ட் வரை, சாலையோரம் அடர்ந்த புதர்கள், முள் செடிகள் வளர்ந்துள்ளது. புதரால் சாலையே குறுகிவிட்டதுடன், வளைவில் வாகனங்கள் வருவதும் தெரியவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது.- நடராஜ், உருமாண்டம்பாளையம்.

தண்ணீரின்றி தவிப்பு

கணபதி, 20வது வார்டு, சுபாஷ் நகரில், உப்பு தண்ணீர் குழாய் உடைந்துள்ளது. இதனால், பல நாட்களாக கழிவுநீருடன் தண்ணீர் கலந்து வருகிறது. தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கோடை காலத்தில் போதிய தண்ணீரின்றி மக்கள் தவிக்கின்றனர்.- சுவிஷேஸ், கணபதி.

அடிக்கடி விபத்து

கோவை மாநகராட்சி, எட்டாவது வார்டு, நேரு நகர் மேற்கு குறுக்கு வீதிகள் ஏழு மற்றும் எட்டு பகுதிகளில், குழாய் இணைப்பு கொடுப்பதற்காக, ரோடுகள் தோண்டப்பட்டு சேதமாகி உள்ளது. பணிகள் முடிந்த பின்பும் சாலையை சீரமைக்கவில்லை. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.- நடராஜன், நேருநகர்.

இருபுறமும் குப்பை

வேடபட்டி, குரும்பபாளையம், பேரூர் ரோடு, காயத்ரி கோவில் அருகில், சாலையின் இருபுறமும் குப்பை கொட்டி வருகின்றனர். பணியாளர்கள் குப்பையை சுத்தம் செய்தாலும் மீண்டும், மீண்டும் பொதுமக்கள் இந்த இடத்தில் குப்பையை வீசிச்செல்கின்றனர். குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அரவிந்த், குரும்பபாளையம்.

தெருவிளக்கு பழுது

கிழக்கு மண்டலம், 53வது வார்டு, பி.எஸ்.ஜி., கோவிந்தசாமி நாயுடு நகர், காமராஜர் மெயின் ரோடு, பேங்க் ஆப் பரோடாவங்கி அருகே உள்ள மின்கம்பத்தில், கடந்த நான்கு வாரங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இருளை பயன்படுத்தி,பல்வேறு சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுவதால், விரைந்து தெருவிளக்கு பழுதை சரிசெய்ய வேண்டும்.- ராஜ், கிழக்கு மண்டலம்.

சறுக்கும் வாகனங்கள்

உப்பிலிபாளையம், காமராஜர் ரோடு, ஓ தாமரா ஓட்டல் எதிரே, சாலையோரம் அதிகளவு மணல் உள்ளது.இருசக்கர வாகனஓட்டிகள், அடிக்கடி மண்ணில் சறுக்கி விபத்தில் சிக்குகின்றனர். பெரிய விபத்துக்கள் நடக்கும் முன், மண்ணை அப்புறப்படுத்த வேண்டும். சாலையோரம் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதாலும், இடையூறு ஏற்படுகிறது.- பாரதி, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி.

துரத்தும் நாய்கள்

சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீதியில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்களை நாய்கள் துரத்தி அச்சுறுத்துகிறது. இரவில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு, குரைக்கும் நாய்களால் நிம்மதியாக துாங்க முடியவில்லை.- சங்கர், கோவை.

தொற்றுநோய் பரவும்

வெள்ளக்கிணறு, மான்செஸ்டர் பள்ளி செல்லும் சாலையில் பல வாரங்களாக குப்பை தேங்கிக்கிடக்கிறது. குப்பையை அகற்றச் சொல்லி, பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. இப்பகுதியை கடக்கும் போது, கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரமற்ற சூழலில் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.- மனோகரன், வெள்ளக்கிணறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை