உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணவரை கொலை செய்ய முயற்சி: கள்ள காதலனுடன் மனைவி கைது

கணவரை கொலை செய்ய முயற்சி: கள்ள காதலனுடன் மனைவி கைது

மேட்டுப்பாளையம்: -: அன்னூர் அருகே கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் நாகேஷ், 25, திருமணம் ஆகாதவர். இவர் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஒரு நிதி நிறுவனத்தின், அன்னூர் கிளையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் அன்னூரை சேர்ந்த ஜாய் மெட்டில்டா, 27, வெரிபிகேஷன் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். ஜாய் மெட்டில்டா திருமணம் ஆனவர். அவரது கணவர் பெயர் லோகநாதன், 33. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இதனிடையே நாகேஷ் மற்றும் ஜாய்மெட்டில்டா இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தெரியவந்ததும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாய் மெட்டில்டாவின் கணவர், இருவரையும் சத்தம் போட்டு, நாகேஷின் வீட்டிற்கும் தகவல் சொல்லி, அவரை ஊருக்கு அனுப்பியுள்ளார். எனினும் ஜாய்மெட்டில்டா கள்ளக்காதலன் நாகேஷுடன் போன் வாயிலாக தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனிடையே ஜாய் மெட்டில்டாவின் கணவர் கடந்த ஏப்ரல் மாதம் மதுரைக்கு சென்ற நிலையில், கர்நாடகாவில் இருந்து நாகேஷ், ஜாய் மெட்டில்டாவின் வீட்டிற்கு வந்தார். அவர்கள் இருவரும் வீட்டில் சத்தமாக பேசியுள்ளனர். அப்போது ஜாய் மெட்டில்டா கணவரின் பாட்டி மயிலாத்தாள், யார் இவர்? இவருடன் எதற்கு சத்தமாக பேசிக் கொண்டிருக்கிறாய் என கேள்வி எழுப்ப, பாட்டியை இருவரும் சேர்ந்து மூக்கை அழுத்தி பிடித்து கொன்றுள்ளனர். பின் அவரை படுக்கையில் படுக்க வைத்து விட்டு, நெஞ்சு வலியால் இறந்து விட்டதாக ஜாய் மெட்டில்டா நாடகம் ஆடி உள்ளார். உடனே நாகேஷ் கர்நாடகாவிற்கு சென்று விட்டார். அவர் அன்னுார் வந்து பாட்டியை கொலை செய்த விவரம் யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் கடந்த 20ம் தேதி, ஜாய் மெட்டில்டா நாகேஷிற்கு போன் செய்து, நாம் இருவரும் பாட்டியை கொலை செய்தது போல், எனது கணவரையும் கொல்ல வேண்டும் என கூறினார். இதற்கு ஒத்துக் கொண்ட நாகேஷ், கடந்த 23ஆம் தேதி அதிகாலை ஜாய்மெட்டில்டா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில், தூங்கிக்கொண்டிருந்த கணவர் லோகநாதனை, நாகேஷும், ஜாய் மெட்டில்டாவும் சேர்ந்து தலையணையை முகத்தில் வைத்து அமுக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட லோகநாதன் அவர்களிடம் இருந்து தப்பினார். இதனால் செய்வதறியாத ஜாய் மெட்டில்டாவும், நாகேஷூம் வீட்டில் இருந்து தப்பித்து சென்றனர். லோகநாதன், அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிந்த போலீசார், நேற்று இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் தான் லோகநாதனின் பாட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை