ரோட்டில் வனவிலங்குகள் நடமாட்டம்; வனத்துறையினர் அட்வைஸ்
வால்பாறை ; வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், வனவிலங்குகள் அதிகளவில் நடமாடுவதால், சுற்றுலா பயணியர் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும். யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், வரையாடு, சிங்கவால் குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.வனவளம் அதிக அளவில் உள்ளதால் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியிலும், அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பகுதியிலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.இந்நிலையில், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் யானை, காட்டுமாடு, வரையாடு, மான், சிங்கவால்குரங்குகள் பகல் நேரத்திலேயே ரோட்டில் நடமாடுகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனவிலங்குகள் ரோட்டை கடக்கின்றன.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், வனவிலங்குகள் அடிக்கடி ரோட்டை கடக்கின்றன. தொடர் விடுமுறையால், வால்பாறையில் குவிந்துள்ள சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும்.வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது. வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லாத வகையில், வாகனத்தில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம்.அதை விடுத்து வாகனத்தை விட்டு கிழே இறங்கி, வன விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றுலா பயணியர் அருகில் செல்லக்கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.