காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு; விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
கோவை; இம்மாத இறுதியில் காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக, சங்கத்தின் மாநிலத் தலைவர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டம், காரமடை அடுத்த தேக்கம்பட்டியைச் சேர்ந்த சரத் என்பவர், கடந்த 17ம் தேதி, தேவனாபுரம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்த போது, சாலையின் குறுக்கே காட்டுப்பன்றி வந்ததால், விபத்து ஏற்பட்டு, படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே வெள்ளியங்காட்டைச் சேர்ந்த ரங்கராஜ், காட்டுப்பன்றி தாக்கி நினைவு திரும்பாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்லலாம் என, வனத்துறை அமைச்சர் பொன்முடி, சட்டசபையில் அறிவித்து 2 மாதங்களாகியும், இதுவரை நடவடிக்கை இல்லை.எனவே, விவசாயத்தையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து, வனத்துக்கு வெளியே வரும் காட்டுப்பன்றிகளைக் கொன்று, நிரந்தரத் தீர்வு காண அறிவிக்க வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில், இம்மாத இறுதியில் காட்டுப்பன்றி ஒழிப்பு மாநாடு நடத்தப்படும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.