அதிரப்பள்ளியில் பழுதாகி நின்ற காரை பந்தாடிய காட்டு யானைகள்
வால்பாறை; அதிரப்பள்ளி ரோட்டில் பழுதாகி நின்ற காரை, காட்டு யானைகள் பந்தாடியதால், சுற்றுலா பயணியர் அதிர்ச்சியடைந்தனர். வால்பாறைக்கு சுற்றுலா வருவோர், தமிழக - கேரள எல்லையில் மளுக்கப்பாறை வழியாக சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு சென்று வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த ரோட்டில் யானைகள் அதிக அளவில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் அங்கமாலியை சேர்ந்த சுற்றுலா பயணியர் இரண்டு வாகனத்தில் மளுக்கப்பாறைக்கு வந்தனர். அப்போது, வாட்சுமரம் என்ற இடத்தில் ஒரு கார் திடீரென பழுதானது. இதனையடுத்து அந்த காரை அங்கேயே நிறுத்தி விட்டு மற்றொரு காரில் அனைவரும் மளுக்கப்பாறைக்கு சென்றனர். பழுதான காரை சரிசெய்ய, மற்றொரு காரில் மெக்கானிக்கை அழைத்து கொண்டு, அதே இடத்திற்கு சென்றனர். அப்போது, அந்த காரை உருட்டி, மிதித்து, யானைகள் பந்தாடியதை கண்ட சுற்றுலா பயணியர் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், சுற்றுலா பயணியர் திரண்டு, யானைகளை அங்கிருந்து விரட்டினர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறை - சாலக்குடி ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். இதை உணர்ந்து அந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணியர் புறப்படுவதற்கு முன்னதாக வாகனத்தில் ஏதேனும் பழுது உள்ளதா என கண்டறிந்த பின், பயணம் செய்தால் இது போன்ற சம்பவம் நடக்காது. இருப்பினும், யானைகள் நடமாடும் பகுதியில் வாகனங்கள் பழுதாகி நின்றால், அந்தப்பகுதியை சேர்ந்த வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.