தாய்மார்கள் பாலுாட்டும் அறை வசதி தபால் நிலையங்களில் ஏற்படுத்தப்படுமா?
கோவை; மேற்கு மண்டல தபால் துறையில் உள்ள, தலைமை தபால் நிலையம் மற்றும் ஆதார் பதிவு மேற்கொள்ளும் தபால் நிலையங்களில், தாய்மார்கள் வசதிக்காக, பாலுாட்டும் அறை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக தபால் துறையில் கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டலத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருப்பத்துார் ஆகிய மாவட்டங்கள் அடங்கியுள்ளன. கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி என இரு கோட்டங்களும், சேலம் மாவட்டத்தில், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு என இரு கோட்டங்களும் செயல்படுகின்றன.கோட்டங்களில் தலைமை தபால் நிலையம் உட்பட தபால் நிலையங்களுக்கு, சேமிப்பு திட்டங்கள் உட்பட தபால் துறை சார்ந்த, பல்வேறு திட்டங்களில் பயன்பெற, பொதுமக்கள் வருகின்றனர்.குறிப்பாக, ஆதார் பதிவுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் வரும் நிலையில், பாலுாட்டுவதற்கு சிரமம் ஏற்படுகிறது. இதற்கென தனியாக வசதி ஏற்படுத்தவில்லை. தபால் துறையின் சில மண்டலங்களில், இந்த வசதி ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை தலைமை தபால் நிலையங்கள் உட்பட, மேற்கு மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்களில், தாய்மார்கள் பாலுாட்டும் அறை ஏற்படுத்த, மேற்கு மண்டல தபால் துறை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.