56வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க., பதுங்குமா... பாயுமா? அரசியல் கட்சியினர் பரபரப்பு விவாதம்
கோவை: கோவை மாநகராட்சி, 56வது வார்டுக்கான இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்த்து விட்டு ஒதுங்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள் உள்ளன. 2022ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., - 73, காங்கிரஸ் - 9, மா.கம்யூ., - இ.கம்யூ., தலா - 4, ம.தி.மு.க., - 3, கொ.ம.தே.க., - 2 மனிதநேய மக்கள் கட்சி - 1 வார்டுகளிலும், அ.தி.மு.க., 3, எஸ்.டி.பி.ஐ., - 1 வார்டிலும் வெற்றி பெற்றன. இதில், 56வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, கடந்தாண்டு உயிரிழந்தார். அக்காலியிடத்துக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது; இம்மாத இறுதிக்குள் வெளியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.இடைத்தேர்தலில் போட்டியிட, மீண்டும் காங்கிரசுக்கு வாய்ப்பு தரப்படுமா அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் ஆளுங்கட்சியின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிய, தி.மு.க.,வே நேரடியாக போட்டியிடுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஏனெனில், சொத்து வரி உயர்வு, 'ட்ரோன் சர்வே', அபராத வரி விதிப்பு, ஆண்டுதோறும் ஆறு சதவீதம் சொத்து வரி உயர்வு, வரியினங்களை வகை மாற்றம் செய்தது, வணிக மின் இணைப்பு எண்களை கொண்டு, கட்டடங்களின் வகையை மாற்றம் செய்து சொத்து வரியை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆளுங்கட்சி மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.'சொத்து வரிக்கான அபராத வரி ரத்து செய்யப்படும்; 'ட்ரோன் சர்வே' கணக்கீடு விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படாது' என, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு அறிவித்திருந்தார். ஆனால், அரசாணை வெளியிடாததால் அந்த அறிவிப்பு இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.அதே நேரம் மார்ச் 31க்கு முன், சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனால், வார்டு இடைத்தேர்தலை எதிர்கொள்வது ஆளுங்கட்சிக்கு சவாலாகவே இருக்கும்.அதேநேரம், அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இடைத்தேர்தலை புறக்கணிக்காமல், தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, வார்டு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.கோவை அரசியல் கட்சியினர் மத்தியில், இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.சொத்து வரி உயர்வு, 'ட்ரோன் சர்வே', அபராத வரி விதிப்பு, ஆண்டுதோறும் ஆறு சதவீதம் சொத்து வரி உயர்வு, வரியினங்களை வகை மாற்றம் செய்தது, வணிக மின் இணைப்பு எண்களை கொண்டு, கட்டடங்களின் வகையை மாற்றம் செய்து சொத்து வரியை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆளுங்கட்சி மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
தலைமை முடிவு செய்யும்
தி.மு.க., நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, 'கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு நடத்தப்படும் இடைத்தேர்தலில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான பணிகளை துவக்க ஆலோசித்துள்ளோம். எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த வார்டு ஒதுக்குவது என்பதை, கட்சி தலைமை முடிவு செய்யும்' என்றனர்.