புதர் சூழ்ந்த டிரான்ஸ்பார்மர்கள் மின்வாரியம் விழிக்குமா
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் ஆங்காங்கே மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை மின்வாரியம் முறையாக அகற்ற வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பொள்ளாச்சி மின்கோட்டத்தில், வீடு, தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிகம் என, மொத்தம், 1,59,732 மின் இணைப்புகள் உள்ளன. ஆனால், பெருகும் குடியிருப்புகள், தொழிற்சாலைகளால் உயரழுத்த, குறைவழுத்த மாறுபாடுகளால், சீரான மின்வினியோகம் தடைபடுகிறது. மேலும், மின் கம்பங்களின் கீழ் குப்பையை குவிப்பது, நீர் தேங்குவது, வாகனங்கள் மோதுவது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் பலமிழந்து வருகிறது. அதற்கேற்ப, புதிதாக மின் கம்பங்கள் கொள்முதல் செய்து, சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. குறைந்த மின் அழுத்தம், உயர் மின் அழுத்தம் குறைபாடுகளை தவிர்க்க, புதிய டிரான்ஸ்பார்மரும் அமைக்கப்படுகிறது. இவைகளை முறையாக பராமரிக்க மாதந்தோறும், குறிப்பிட்ட நாளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இருப்பினும், சில பகுதிகளில், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் செடி, கொடிகள் வளர்ந்து நிற்கினறன. குறிப்பாக, பாலக்காடு ரோடு, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒட்டிய பகுதியில், புதர்களின் நடுவே டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டதுபோல உள்ளது. மின் ஒயர்களின் மீது செடி, கொடிகள் படர்வதால், மழையின்போது மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்கம்பத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.