நல்ல நாள் இன்றும் வரலியோ! கட்டி முடித்தும் பயனில்லை
அன்னுார்: ரூ.15 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடம், ஆறு மாதங்களாக முடங்கி கிடக்கிறது. அன்னுார் பேரூராட்சியில், குன்னத்தூராம்பாளையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மையத்தில், இரண்டு வயது முதல் ஆறு வயது வரையிலான 20 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றன. தற்போது அங்கன்வாடி மையம் செயல்படும் வாடகை கட்டடம், மிகவும் சிறியதாகவும் பழுதடைந்ததாகவும் இருந்ததால், புதிய கட்டடம் கட்டித்தரும்படி பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்தினர். கடந்தாண்டு, அவிநாசி எம்.எல்.ஏ., தனபால் தொகுதி மேம்பாட்டு நிதியில், 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அங்கன்வாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது; இன்னும் திறக்கவில்லை. அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கட்டடம் கட்டி முடித்து ஆறு மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. குழந்தைகள் சரியாக காற்றோட்டம் இல்லாத சிறிய அறையில் கல்வி பயின்று வருகின்றனர். 15 லட்சம் ரூபாய் செலவழித்து கட்டிய கட்டடத்தை விரைவில் திறக்க வேண்டும்' என்றனர்.