மீண்டும் முளைத்துள்ள விளம்பர பலகைகள் நிரந்தரமாக அகற்றப்படுமா?; மாநகராட்சிக்கு சவால்
கோவை : சென்னை ஐகோர்ட்டில் தடையுத்தரவு பெற்று, கோவையில் ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.கோவையில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பக் கூடாது என்பதற்காகவே, விளம்பர பலகைகள் வைக்கக் கூடாதென நீதிமன்றங்களால் பலமுறை அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருக்கிறது. அதை கண்டுகொள்ளாமல், சில இடங்களில், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியோடு வைக்கப்படுகின்றன.இச்சூழலில், ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பது தொடர்பான வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது; அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக களத்தில் இறங்கி, ரயில்வே இடங்களில் விளம்பரங்களை அகற்றியது. இச்சூழலில், தனியார் ஏஜன்சியை சேர்ந்தவர்கள், சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டு, தடையுத்தரவு பெற்றதை தொடர்ந்து, மீண்டும் விளம்பர பலகைகளை வைத்துள்ளனர்.இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கோர்ட்டில் தடையுத்தரவு பெற்று, விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் மூலமாக, அரசு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.