அவிநாசி ரோட்டில் சுரங்கப்பாதைகள் வருமா, வராதா? நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு பதில்
கோவை : கோவை - அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை (சிறப்பு திட்டங்கள்) மூலம் மேம்பாலம் கட்டப்படுகிறது. இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இம்மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தது. இன்னும் வேலைகள் நிறைய இருப்பதால், சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்தபோது, 'இன்னும் இரு மாதங்கள் அவகாசம் தேவை; செப்., மாதத்துக்குள் முடித்து விடுவோம்' என, நெடுஞ்சாலைத்துறையினர் உறுதி கூறியுள்ளனர்.ஹோப்ஸ் காலேஜ் ரயில்வே மேம்பாலப் பகுதியில், இரும்பு கர்டர் துாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அதன் இருபுறமும் பாக்ஸ் வடிவிலான கான்கிரீட் கர்டர் வைக்க வேண்டும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இச்சூழலில், கோவை வந்திருந்த தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, மேம்பாலப் பணியின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்தார். பின், கோல்டுவின்ஸ் வரை சாலை மார்க்கமாக சென்ற அமைச்சர், அங்கிருந்து பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி வரை மேம்பாலத்தில் காரில் பயணித்தார். அரவிந்த் கண் மருத்துவமனை முன் அமைத்துள்ள இறங்கு தளத்தில் இறங்கி, விமான நிலையம் சென்றார். மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.அமைச்சரிடம், 'அவிநாசி ரோட்டில் ஐந்து இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. சுரங்க நடைபாதை அமைக்கவில்லையே, ரோட்டை கடக்க பாதசாரிகள் சிரமப்படுவார்களே...' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, அமைச்சர் பதிலளிக்கையில், ''எட்டு இடங்களில் இறங்கு தளம்/ ஏறு தளம் அமைக்க வேண்டும். ஓரிடத்தில் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கிறது. ரயில்வே மேம்பாலப் பகுதியில் இரும்பு கர்டர் வைக்கப்பட்டுள்ளது. மேம்பாலப் பணிகள் முழுமையாக முடிந்ததும், அவசியம் ஏற்பட்டால், பொறியாளர்களுடன் ஆலோசித்து, சுரங்க நடைபாதை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.