பத்து மாதங்களில் 3,284 தடவை அழைத்த பெண்கள்
கோவை: பெண்கள் பாதுகாப்புக்காக பயன்படும், 181 அவசர உதவி எண்ணில் கடந்த, 10 மாதங்களில், 3,284 அழைப்புகள் கோவையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குடும்ப வன்முறை, தகராறு சார்ந்த புகார்கள் மட்டுமே, 47 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. டில்லியில் மருத்துவ மாணவி ஒருவர், கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதை தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்புக்காக, மத்திய அரசு 'நிர்பயா நிதி' என்ற நிதியை ஏற்படுத்தியது. இந்நிதி ஒதுக்கீட்டில், மகளிர் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக 181 என்ற உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு, 'சகி' எனும் ஒன் ஸ்டாப் மையம் ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில், 2018ம் ஆண்டு முதல், இச்சேவை வழங்கப்படுகிறது. கோவை அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், 181 - சகி எனும் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. பாதிப்புக்கு உள்ளாகி வரும் பெண்கள் தங்க, வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தினமும் வரும் அழைப்புகள் தொகுக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த பத்து மாதங்களில் பதிவான புகார்களில், 47 சதவீத பிரச்னைகள், பெண்களுக்கு அவரவர் குடும்பங்களில் இருந்தே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி அம்பிகா கூறியதாவது: பாதிக்கப்பட்ட பெண்கள், எந்த பிரச்னையாக இருந்தாலும், சட்ட, மருத்துவ உள்ளிட்ட ஒருங்கிணைந்த உதவிகள் வழங்க, 'சகி' எனும் ஒன் ஸ்டாப் சென்டரை அணுகலாம். கடந்த பத்து மாதங்களில், 3,284 அவசர அழைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், குடும்ப தகராறு பிரிவில் 1038 அழைப்புகள், குடும்ப வன்முறை 507, குழந்தை திருமணம் 238, பாலியல் சார்ந்த புகார் 59 உள்ளிட்டவை அடங்கும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தங்கும் இடம், மருத்துவ உதவி, சட்ட ரீதியான உதவி, கவுன்சிலிங் வழங்கப்படும். தற்காலிகமாக, ஏழு நாட்களுக்கு சகி ஒன் ஸ்டாப் மையத்திலேயே தங்கவைத்துக்கொள்ளவும் வசதிகள் உள்ளன; அதன் பின்னர் இல்லங்களுக்கு மாற்றப்படுவார்கள். பெண்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும், 181 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டால், உடனடியாக உதவி கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.