நான்கு முறை எழுதிக் கொடுத்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கல
அன்னுார், : 'நான்கு முறை எழுதிக் கொடுத்தும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை,' என பெண்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். அன்னுார் அருகே மூக்கனுாரில் தி.மு.க., சார்பில், நன்றி அறிவிப்பு கூட்டம் நடந்தது. நீலகிரி எம்.பி. ராசா பேசுகையில், ''பட்டியல் இனத்தோர், பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்,'' என்றார்.அப்போது, பெண்கள், ஓராண்டாக நான்கு முறை எழுதிக் கொடுத்தும் இதுவரை மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை. தாலுகா ஆபீசுக்கும், வி.ஏ.ஓ., ஆபிசுக்கும் நடையாய் நடக்கிறோம்,' என்றனர்.'விண்ணப்பித்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. மற்றவர்களில் தகுதியான நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் வழங்கப்படும்,' என்றார்.இதையடுத்து, அ.மேட்டுப்பாளையத்திலும் ஏராளமான பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, தனபால், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.