நீலம்பூரில் போலீஸ் ஸ்டேஷன் துவக்க இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்
சூலுார்: நீலம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் துவக்க, இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் போலீஸ் மானிய கோரிக்கையின் போது, கோவை மாவட்டம் நீலம்பூரில், ரூ. 4.88 கோடி செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் துவக்கப்படும், என, முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில், புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான நிலங்கள் எங்குள்ளது என, வருவாய்த்துறை உதவியை நாடியுள்ளனனர். இடம் தேர்வு செய்யப்பட்டு, அரசின் ஒப்புதல் பெற்று, கட்டுமான பணிகள் துவக்கி முடிக்க பல மாதங்கள் ஆகும் என்பதால், அதற்கு முன்பாக, தற்காலிக கட்டடத்தில் ஸ்டேஷனை துவக்க, போலீஸ் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக, நீலம்பூர் பகுதியில், அவிநாசி ரோடு, எல் அண்ட் டி பை - பாஸ் ரோட்டுக்கு அருகில் வாடகை வீடுகளோ அல்லது அரசு கட்டடங்களோ உள்ளதா என, தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நீலம்பூர் சுற்று வட்டார பகுதியில் தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் ஐ.டி., நிறுவனங்கள் உள்ளதால், காலி வீடுகள் இருப்பதே அரிதாக உள்ளது. மேலும் வாடகையும் அபரிமிதமாக உள்ளது. ஸ்டேஷன் துவக்க தேவையான குறைந்த பட்ச வசதிகள் இருக்கும் இடங்கள் ஏதாவது கிடைக்குமா என, போலீசார் தேடி வருகின்றனர். ஓரிரு வாரங்களில் வாடகை இடத்தை தேர்வு செய்து, ஸ்டேஷன் துவக்கும் பணியை தீவிரமாக மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.